இலங்கை கலவரம்: அமைச்சர், மேயர்,ஆளுங்கட்சி பிரமுகர்கள் வீடுகளுக்கு தீ வைப்பு.!

இலங்கை கலவரம்: அமைச்சர், மேயர்,ஆளுங்கட்சி பிரமுகர்கள் வீடுகளுக்கு தீ வைப்பு.!
X
ஆளுங்கட்சி எம்.பி., அவரது பாதுகாப்பு அதிகாரி பலியாகினர். மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டன.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகவேண்டும் என மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது, சாமானிய மக்களால் ஒரு பொருளை வாங்க முடியாத அளவுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட்டது.

பெட்ரோல் டீசல், மருந்து, மின்சாரம் தட்டுப்பாடு மக்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றிப் போட்டது. பொறுமை இழந்த மக்கள் கடந்த மாதம் 9ம் தேதி முதல், சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், பதவியை ராஜினாமா செய்ய அவர்கள் மறுத்தனர். ஆளும் கட்சி கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்களே, பிரதமர் மகிந்தவுக்குஎதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுதும் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டு கலவரம் மூண்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. போராட்டம் அதிகதிரித்து நிலைமை மோசமானது. இந்த நிலையில்தான், நேற்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியாகினர். மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் சுற்றிய நிலையில், ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி அமரகீர்த்தி அத்துகொரலா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஆளுங்கட்சி ஆதரவாளர்களை ஏற்றிவந்த பேருந்தை மாலிகாவத்தை பகுதியில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மொரட்டுவை பகுதி மேயரின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு, அவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து, அசாதாரண சூழல் நிலவுவதால் பதற்றமான பகுதிகளில் ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். நாடு முழுதும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விமான பயணியருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!