சூயஸ் கால்வாயில் தேங்கி நிற்கும் கப்பல்கள்
உலகில் மிக அதிக அளவிலான சரக்குக் கப்பல் போக்குவரத்து இடம்பெறும் சூயஸ் கால்வாயில், கப்பல் ஒன்று கரை தட்டியதால், போக்குவரத்து அதிகமாக தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் என்ற நிறுவனத்தின் இந்த கப்பல், பனாமா நாட்டு கொடியுடன் சீனாவின் அதிக அளவிலான கண்டைனர்களை ஏற்றிக்கொண்டு, மார்ச் 22 திங்கட்கிழமை இரவு அன்று சூயஸ் கால்வாயை அடைந்தது. அதன்பின்னர் நேற்று அதிகாலை அங்கிருந்து கிளம்பி நெதர்லாந்து நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
அப்போது திடீரென பலமான காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்த கப்பலின் முன்பாகம், சூயஸ் கால்வாயின் ஒரு பக்க சுவற்றில் மோதியது. அத்துடன் பின்பக்கமும் விரைவாக திரும்பி மற்றொரு பக்கத்தை இடித்துக் கொண்டது. இதையடுத்து கப்பல் நகர முடியாமல் அங்கேயே நிற்கிறது.
இந்த சம்பவத்தை அதே பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு கப்பலில் பயணித்த ஜூலியன் கோனா எனும் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டதை அடுத்து விஷயம் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய சூயஸ் நிர்வாகம், கப்பலை மீட்டெடுத்து நிலையை சரிசெய்ய முயன்று வருகிறோம். கப்பல் மோதிய இடத்தில் உள்ள மணலை அகற்றி, இதை முழுமையாக செயல்படுத்த குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும் என தெரிவித்துள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த கால்வாயில் ஆண்டிற்கு ஒரு பில்லியன் டன்னிற்கும் அதிக அளவிலான வர்த்தகம் நடைபெறுவதாக சூயஸ் நிர்வாகம் கடந்த 2020'இல் தெரிவித்திருந்தது.
எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடல்வழி போக்குவரத்தை எளிதாக்க 1869'இல் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய் 193 கிமீ நீளமும், 24 மீ ஆழமும், 205 மீ அகலமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்திற்கு மிகப்பெரிய அளவில் வருமானம் தரும் இந்த கால்வாயில் இருந்து வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எகிப்து அரசு, கடந்த 2015'இல் பெரிய கப்பல்களும் பயணிக்கும் வகையில் மாற்றியமைத்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu