இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று கூறி அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற பிப்ரவரியில் கொண்டு வந்தது.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது.இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்படுவது இலங்கை அரசுக்கு ஒருவித சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தீர்மானம் மீதான இறுதி வாதத்தின்போது இலங்கை அரசு சார்பில் பேசிய அதன் பிரதிநிதி எங்கள் நாட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த வரைவு தீர்மானம் பற்றிய அசாதாரணமான யோசனை, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அனுமதித்தால் இது மிகப்பெரிய ஆபத்தாக மாறும். இந்த தீர்மானத்தின்படி திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தால், அதற்காக 2.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி தேவை.
அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இலங்கை அரசு ஒரு நடவடிக்கையை எடுத்து மனித உரிமைகளை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்மானம், இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். இலங்கை இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளைக் காப்பதில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு பொறுப்பு இருப்பதாக கூறினார். அண்டை நாடு எனும் அடிப்படையில் இறுதிப்போருக்கு பின்னர் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதைப் போல, 13வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அவர் வலியுறுத்தினார். சீனா, பாகிஸ்தான் வாக்கெடுப்பின்போது கூறியது
மனித உரிமைகள் என்ற பெயரில் இவ்வாறான தீர்மானங்கள் மூலம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை தாங்கள் எதிர்ப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்த சீன அரசின் பிரதிநிதி, இந்தத் தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார். பிற நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்தார்.
சீனா, பாகிஸ்தானும் இந்தத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.வெனிசுவேலா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu