கருவிலேயே உணவின் சுவையை அறியும் குழந்தை பற்றிய ஆராய்ச்சி முடிவு

கருவிலேயே உணவின் சுவையை அறியும் குழந்தை பற்றிய ஆராய்ச்சி முடிவு
கருவிலேயே உணவின் சுவையை அறியும் குழந்தை பற்றி ஆராய்ச்சி முடிவை இங்கிலாந்து பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

தாய்மை ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைத்த அரிய வரப்பிரசாதம் ஆகும். அதனால்தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாரில் மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டும் அம்மா என பாடினான். இவ்வுலகில் தாய்மை அடைய முடியாத பெண்களுக்கு எத்தனையோ அவமானங்கள் ஏற்படுவது உண்டு. தற்போதைய நவீன விஞ்ஞான உலகத்தில் செயற்கை முறையில் பெண்கள் தாய்மை அடைவதற்கும் எத்தனையோ விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன.

ஒரு குழந்தை கருவில் உருவாகிறது. இவ்வுலகில் அவதரித்து வாழ்ந்து விட்டு அதன் ஆத்மா கல்லறையுடன் நிறைவடைகிறது. அதனால் தான் கருவில் தோன்றி கல்லறையில் முடியும் வாழ்க்கை என கூறப்படுவது உண்டு. குழந்தை தாயின் கருவறையில் உருவாகும் போதே பசி, உற்சாகம், சோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் பெற தொடங்கி விடுகிறது. என்கிறார்கள். குழந்தை கருவில் உருவாகும் போதே அதன் தலையில் எழுதப்பட்டு விடுகிறது அதுதான் அதன் தலைவிதி என்கிறது இந்து மதம். உன்னை நான் கருவிலேயே அறிவேன் என கூறுகிறது கிறிஸ்தவ மதம்.இப்படி ஒவ்வொரு மதத்திலும் கரு குழந்தையை பற்றி எவ்வளவோ கூறப்பட்டு இருக்கின்றன.

மகாபாரத காவியத்தில் அபிமன்யு என ஒரு கதாபாத்திரம் உண்டு. வில்லுக்கு ஒரு விஜயன் என போற்றப்படும் அர்ஜுனனின் மகனான அபிமன்யு தாயின் கருவறையில் இருக்கும் போது அவனுக்கு போர்க்கலைகளை அவனது தாய் கற்றுக் கொடுத்ததாகவும் தாய்க்கூறியதை அப்படியே கேட்டுக் கொண்டிருந்த குழந்தை இவ்வுலகில் அவதரித்த பின்னர் மகாபாரதப் போரில் மகாபாரத யுத்தத்தில் சக்கரா வியூகம் அமைத்து கௌரவர் படையை சேதப்படுத்தினான். ஆனால் சக்கரா வியூகத்தில் உள்ளே எப்படி நுழைந்து துவம்சம் செய்வது என்பதை தெரிந்து கொண்ட அவனால் அதிலிருந்து வெளியே வந்து மீள்வது எப்படி என கற்பிக்கப்படவில்லை. காரணம் அந்த கலையை கற்பிக்கும் போது அவன் தாய் உறங்கி விட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆக கரு குழந்தையின் வளர்ச்சியிலேயே அத்தனை உணர்வுகளும் உண்டு என்பதை இதிகாசமும் கூறி இருக்கிறது.

இந்த நவீன யுகத்தில் குழந்தை கருவில் எப்படி உருவாகிறது எப்படி வளர்ச்சி அடைகிறது என்பதை அறிய நவீன கருவிகள் வந்துவிட்டன. மருத்துவ உலகில் குழந்தை உருவான நாள் முதல் பிரசவம் ஏற்படும் வரை அதன் வளர்ச்சிகளை நவீன விஞ்ஞான உலகம் நாள்தோறும் சொல்லி வருகிறது.அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது.உணவின் சுவையை உணர்ந்து கருவில் இருக்கும் குழந்தைகள் வெளிப்படுத்திய முக பாவனைகளின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ளது டர்ஹாம் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட வித்தியாசமான ஆய்வின் சுவாரசிய முடிவு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதாவது தாயின் கருவில் இருக்கும் குழந்தைகள் பல்வேறு உணவின் வாசனைகள் மற்றும் சுவைகளை உணர்ந்து எவ்வாறு முக பாவனைகளை வெளிப்படுத்துகின்றன என்பது தான் அந்த ஆராய்ச்சி.

டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 100 கர்ப்பிணிப் பெண்களிடம் 4டி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது 35 கர்ப்பிணி பெண்களுக்கு கேரட் சுவை கொண்ட காப்ஸ்யூல்கள் வழங்கப்பட்டது. அவர்கள் அதை எடுத்துக்கொண்ட 20 நிமிடங்களுக்கு பிறகு கருவில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரிப்பது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தெரிய வந்தது. அதே நேரத்தில் மற்ற 35 கர்ப்பிணி பெண்களுக்கு முட்டைக்கோஸ் போன்ற 'இலை தாவர உணவு' சுவை கொண்ட காப்ஸ்யூல்கள் வழங்கப்பட்டது. இதை அந்த கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் குழந்தைகள் 'அழுகை முகத்துடன்' இருப்பது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தெரியவந்தது. ஆய்வில் வெளியான சுவாரசிய தகவல் இந்த ஆய்வின் போது உணவின் சுவையை உணர்ந்து கருவில் குழந்தைகள் வெளிப்படுத்திய முக பாவனைகளின் புகைப்படங்களை டர்ஹாம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலகிற்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. குழந்தை கருவாக இருக்கும்போதே அனைத்து உணர்வுகளை கற்றுக்கொள்ள தயாராகிறது என்பதால் கர்ப்பிணி பெண்கள் தங்களது குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதையும் ஒரு தகவலாக வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் தாய்மை அடைந்துள்ள பெண்கள் முடிந்த வரை சந்தோஷமாக இருக்கவேண்டும். தாய் சந்தோஷமாக இருந்தால் குழந்தையும் அந்த சந்தோஷத்தை தானும் அனுபவிக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் குழந்தைகளுக்கு இசை மற்றும் கல்வி உணர்வை ஏற்படுத்தவும் கருவை சுமக்கும் பெண் தயாராக இருக்கவேண்டும்.

Tags

Next Story