45 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி ஆற்று தண்ணீர் நிறுத்தம்

45 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி ஆற்று தண்ணீர் நிறுத்தம்

ரவி ஆற்றில் கட்டி முடிக்கப்பட்ட அணை

45 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி ஆற்று தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 45 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ஒரு திட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி ஆற்றின் நீரை நாமே பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த 45 ஆண்டுகளாகக் கட்டிமுடிக்காமல் இருந்த அணையை நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போது கட்டி முடித்துள்ளார்கள். இதன் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி ஆற்றின் நீர் ஒரு வழியாக நிறுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ் கடந்த 1960இல் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் ரவி ஆற்றின் நீர் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு உரிமை என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், இந்த நீரைத் தடுத்து நிறுத்த பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில் ஷாபூர் கண்டி தடுப்பணை கட்டி இருக்க வேண்டும். இருப்பினும், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தடுப்பணை கட்டுமானம் பாதியில் நின்றது. இதனால் இந்தியாவுக்குச் சொந்தமான நீர் இத்தனை ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு செல்கிறது. இதைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் நீர் மீது இந்தியா முழு உரிமையும், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நீர் மீது பாகிஸ்தானுக்கு உரிமையும் இருப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரைத் தடுக்க பஞ்சாப் மற்றும் காஷ்மீர் அரசுகள் இணைந்து கடந்த 1979ஆம் ஆண்டில், ரஞ்சித் சாகர் அணை மற்றும் ஷாபூர் கண்டி தடுப்பணை கட்ட முடிவு செய்தன.

அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த ஷேக் முகமது அப்துல்லாவும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும் கையெழுத்திட்டனர். 1982 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த மெகா திட்டம் இது 1998இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஞ்சித் சாகர் அணையின் கட்டுமானம் 2001இல் நிறைவடைந்த போதிலும் ஷாப்பூர் கண்டி தடுப்பணை கட்டுமானம் முடியவில்லை. இதனால் ரவி ஆற்றில் இருந்து பாகிஸ்தானிற்குத் தொடர்ந்து நீர் பாய்ந்தது.

2008 இல், ஷாபூர் கண்டி திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் கட்டுமானப் பணிகள் 2013இல் தான் தொடங்கப்பட்டது. இருப்பினும், 2014இல் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் இடையே மீண்டும் பஞ்சாயத்து வரவே இத்திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. சுமார் 4 ஆண்டுகள் எந்தவொரு கட்டுமானமும் நடைபெறவில்லை. இறுதியாக 2018ஆம் ஆண்டில், மத்திய அரசு மத்தியஸ்தம் செய்யவே இரு மாநிலங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அது இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் மூலம் இத்தனை ஆண்டுகள் பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த நீர் ஜம்மு காஷ்மீரின் இரண்டு முக்கிய மாவட்டங்களான கதுவா மற்றும் சம்பாவில் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும். 1150 கன அடி நீர் இனி காஷ்மீரில் உள்ள 32,000 ஹெக்டேர் நில பாசனத்திற்குப் பயன்படும். மேலும், இந்த அணையில் இருந்து பெறப்படும் மின்சாரத்தில் 20 சதவிகிதம் காஷ்மீருக்கே செல்லும் 55.5 மீட்டர் உயரமுள்ள ஷாபுர் கண்டி அணையானது 206 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு நீர் மின் திட்டங்களை கொண்டதாகும்.

இது ரஞ்சித் சாகர் அணை திட்டத்தின் கீழ் 11 கிமீ தொலைவில் ரவி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. காஷ்மீர் இத்திட்டத்தில் பெருமளவு பயன்பெறும் நிலையில், அது தவிரப் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களும் கூட இத்திட்டத்தால் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story