இந்தியாவுக்கு திரும்ப கிடைத்த 29 வரலாற்று சிறப்புமிக்க கலைப் பொருட்கள்
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற முதலாவது காணொலிக் காட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கனிம வளங்கள், நீர் மேலாண்மை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம், கோவிட் 19 தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழமையான கலைப் பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதற்காக ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 9-ஆவது மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவையாகும். மேலும் 12 ஆம் நூற்றாண்டு சோழர்களின் வெண்கலங்கள், 11, 12 ஆம் நூற்றாண்டின் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெயின் சிற்பங்கள், குஜராத்தில் 12, 13 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மணல் கற்களால் செய்யப்பட்ட மஹிசாசூரமர்த்தினி சாமி சிலைகள், 18, 19 ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் ஆகியவையும் அடங்கும். கோவிட் பெருந்தொற்றின் போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட இந்தியர்களின் நலனில் அக்கறை செலுத்தியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் செழிப்புக்கு இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்வது அதிகரித்து வருவது குறித்து இருதலைவர்களும் பாராட்டுத் தெரிவித்தனர். பல்வேறு துறைகளில் விரிவான சிறப்பு கவனம் செலுத்துவது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, இருநாட்டு பிரதமர்களுக்கு இடையே வருடாந்திர மாநாடுகளை நடத்துவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் இருதரப்பு உறவுகளில் மேலும் சிறப்பு பரிமாணத்தை ஏற்படுத்தும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu