ஈரான் புதிய அதிபர் மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி, ஈரான் புதிய அதிபர் மசூத் பிசிஷ்கியான்.
ஈரானில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. புதிய அதிபராக மசூத் பிசிஷ்கியான் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் புதிய அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஈரானின் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாகவே பெரும் கவனம் பெற்றிருந்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறி இஸ்ரேல், ஈரானின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவத்தின் முக்கிய தலைகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கடும் தாக்குதலில் இறங்கியது மட்டுமல்லாது மேற்கு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இப்படியாக மேற்கு நாடுகளுடன் மோதல் போக்கில் ஈரான் ஈடுபட்டிருந்த நிலையில்தான், அந்நாட்டில் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டன. அந்நாட்டில் மொத்தம் 6 கோடி பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் இந்த அதிபர் தேர்தலில் 3 கோடி பேர்தான் வாக்களித்தனர். தேர்தலில் களமிறங்கியிருந்த மசூத் பிசிஷ்கியான் தொடக்கம் முதல் கவனம் பெற்றிருந்தார்.
காரணம், தான் ஆட்சிக்கு வந்தால் மேற்கு நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்த முயல்வேன் என்று கூறியிருந்ததுதான். மசூத் பிசிஷ்கியான் அடிப்படையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் சிறந்த சீர்திருத்தவாதியாகவும் அடையாளம் காணப்படுகிறார். தேர்தலில் இவருக்கு பெரும்பான்மை கிடைத்தது. அதாவது இவர் 1.63 கோடி வாக்குகளையும் (53.70%) இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களில் முக்கியமானவரான சயீத் ஜலிலி 1.30 கோடி வாக்குகளையும் பெற்றுள்ளார். இதனையடுத்து புதிய அதிபராக மசூத் பிசிஷ்கியான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் புதிய அதிபர் மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான தனது x தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “நம் மக்களின் நலனுக்காகவும், இந்த பிராந்தியங்களின் நலனுக்காகவும், நெடுங்காலமாக இருந்து வரும் இருநாடுகளின் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக மசூத் பெசஷ்கியானுடன் நெருக்கமாகப் பணிபுரிய எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகள், முதலீடுகள், அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி உள்ளிட்டவற்றில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதேபோல, கலாச்சாரம் தொடர்பாகவும் சில சிக்கல்கள் இருக்கின்றன.
பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும், அப்படி அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இதற்கு முந்தைய அரசாங்கம் கூறியிருந்தது. ஹிஜாப் அணியவில்லை என்று கடந்த 2022ம் ஆண்டு அமினி எனும் இளம்பெண் கலாச்சார காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கு ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu