இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்திய அந்நாட்டு மக்கள்.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. மட்டுமல்லாது நெதன்யாகுவை பதவி விலகவும் அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
இப்படி இருக்கையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ஹமாஸ் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி கூறுகையில், "போர்நிறுத்தம், பணயக்கைதிகளை திரும்ப ஒப்படைத்தல் போன்றவற்றை செய்ய தயராக இருக்கிறோம். போர் நிறுத்தம் என்பது அமெரிக்காவுக்கு உண்மையான சோதனையாகும். அவர்கள் போர் நிறுத்தத்திற்கு நிஜமாகவே தயாராக இருக்கிறார்களா? என்பது இப்போது தெரிந்துவிடும்" என்று கூறியுள்ளார்.
மறுபுறம் இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹமாஸ் அமைப்பிடம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் போட்டு அங்குள்ள பணயகைதிகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். நேற்று ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட அந்நாட்டு மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரமாண்ட பேரணி நடத்தியுள்ளனர். மட்டுமல்லாது பிரதமர் நெதன்யாகுவை ராஜினாமா செய்ய கூறியும் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu