கனடாவில் மாயமாகும் பாகிஸ்தான் விமான பணிப்பெண்கள்: காரணம் இது தான்

பாகிஸ்தான் நாட்டில் இருந்து கனடா சென்ற விமானப் பணிப் பெண்கள் அடுத்தடுத்து மாயமாகி வருகிறார்கள். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானில் இருந்து கனடா சென்ற பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் திடீரென மாயமானார். இதற்கிடையே சில நாட்களில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர் கனடாவின் டொராண்டோவில் விமானம் தரையிறங்கிய உடன் மாயமாகி இருக்கிறார். மாயம் என்றால் அவரை கடத்தியதாக அர்த்தம் இல்லை. அவராகவே பணிக்குத் திரும்பாமல் கனடா நாட்டில் சட்ட விரோதமாகச் சென்றுள்ளார்
கடந்த வியாழக்கிழமை கனடாவுக்குச் சென்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்தார் ஜிப்ரான் பலோச். ஆனால், விமானம் மீண்டும் கனடாவில் இருந்து புறப்படும் போது அவர் விமானத்தில் ஏறவில்லை. அவரை ஏர்லைன் ஊழியர்கள் ஹோட்டல் முழுக்க தேடியுள்ளனர். இருப்பினும் அவரை அங்கே கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னரே அந்த பாக். விமானப் பணிப்பெண் மாயமானது தெரிய வந்தது. இதுபோன்ற சம்பவம் ஒரே வாரத்தில் கனடாவில் இரண்டாவது முறையாக நடக்கிறது.
கடந்த திங்கள்கிழமை இதேபோல பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு விமானப் பணிப்பெண்ணான மரியம் ராசா மாயமானார். அது நடந்து சில நாட்களில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. திங்கள்கிழமை கனடா சென்ற அவர், செவ்வாய்க்கிழமை மீண்டும் விமானம் புறப்படும் போது திரும்பவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தான் அவர் மாயமானது தெரிய வந்தது. அவரது ரூமில், பாகிஸ்தான் ஏர்லைன் சீருடை இருந்த நிலையில், அத்துடன் "நன்றி, PIA" என்ற வாசகமும் இருந்தது. அது சரி பாகிஸ்தானைச் சேர்ந்த பணிப்பெண்கள் எதற்காக திடீரென கனடாவில் மாயமாகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
பாகிஸ்தான் பெண்கள் திடீரென மாயமானது கனடாவில் தங்க அவர்கள் தேர்ந்தெடுத்த வழி போலத் தெரிகிறது. ஏனென்றால் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எளிதாகக் கனடாவில் அகதிகளாகப் புகலிடம் கோர முடியும். கனடா சட்டமே அப்படி தான் இருக்கிறது. கனடா எல்லைக்குள் வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும் அகதிகளாகப் புகலிடம் கோரலாம் என்பதே சட்டம். நீங்கள் விமான நிலையத்திற்கு வந்துவிட்டால் கூட போதும். புகலிடம் கோரலாம் என்பதே விதி. இது தொடர்பான சட்டப்படி, "துன்புறுத்தல் அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து காரணமாக நீங்கள் உங்கள் நாட்டை விட்டு வெளியேறினால், நீங்கள் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம். உங்களுக்குப் புகலிடம் வழங்கப்பட்டால், நீங்கள் அகதி அந்தஸ்தையும், தங்குவதற்கான உரிமையையும் பெறுவீர்கள். புகலிடத்திற்கு விண்ணப்பிக்க, நீங்கள் கனடாவில் இருக்க வேண்டும். அல்லது விமான நிலையம், நாட்டின் எல்லைப் பகுதி அல்லது கனடாவில் உள்ள துறைமுகத்திற்கு வர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. பயன் இல்லை: அடுத்தடுத்து இரண்டு பணிப்பெண்கள் மாயமான நிலையில், மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக விமான ஊழியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இருப்பினும், அதற்கு எந்த பலனும் இல்லை. அதேநேரம் கனடாவில் பாகிஸ்தான் விமான ஊழியர்கள் மாயமாவது இது முதல்முறை இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu