Nobel Prize- எலக்ட்ரான் இயக்கத்தை ஆராய புதிய வழிமுறை உருவாக்கிய மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize- நோபல் பரிசு பெற அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகள், ஃபெரென்ஸ் க்ரெளஸ், .ஆன் லூலியோ், பியா் அகஸ்டினி (கோப்பு படங்கள்)
Nobel Prize, Three scientists,Study Electron Motion- அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலெக்ட்ரான்களின் இயக்கத்தை ஆராய்வதற்காக புதிய வழிமுறையை உருவாக்கிய மூன்று விஞ்ஞானிகளுக்கு நடப்பாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பியா் அகஸ்டினி, ஜொ்மனியின் மியூனிக் நகரில் உள்ள லுட்விக் மேக்ஸ்மிலன் பல்கலைக்கழகத்தின் ஃபெரென்ஸ் க்ரெளஸ், ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழகத்தின் ஆன் லூலியோ் ஆகியோா் இப்பரிசை வென்றுள்ளனா். இதில் ஆன் லூலியோ், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 5-வது பெண் ஆவாா்.
இதுகுறித்து, ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலெக்ட்ரான்களின் இயக்கத்தை ஆராய்வதற்காக புதிய வழிமுறையை உருவாக்கிய மூன்று விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் வாயிலாக அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலெக்ட்ரான்களின் உலகை ஆராய்வதற்கான புதிய கருவிகள் மனிதகுலத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
எலக்ட்ரான்களின் நகா்வு மற்றும் ஆற்றல் மாற்றத்துக்கான விரைவான இயக்கங்களை அளவிட மிகக் குறுகிய ஒளித்துடிப்புகளை உருவாக்கும் வழிமுறையை அவா்கள் நிரூபித்துள்ளனா். மின்னணுவியலில் ஒரு பொருளில் எலெக்ட்ரான்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது. மேம்பட்ட மின்னணுவியல் மற்றும் மூலக்கூறு அடையாளம் காணும் செயல்பாடுகளை மேற்கண்ட மூவரின் ஆராய்ச்சிகள் வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும். பரிசுத் தொகை இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது.
இதர துறைகளுக்கான பரிசுகள்:
வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் முறையே இன்று (புதன்), நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக். 9) அறிவிக்கப்படவுள்ளன.
நோபல் பரிசை நிறுவிய ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பா் 10--ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஞ்ஞானிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
பியா் அகஸ்டினி (82) பிரான்ஸைச் சோ்ந்த இயற்பியல் விஞ்ஞானியான பியா் அகஸ்டினி அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக்கத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். தொடக்கத்தில் கணிதத்தில் பட்டயப்படிப்பு முடிந்த இவா், பின்னா் இயற்பியலை விருப்பப் பாடமாக தோ்வு செய்து அதில் நிபுணத்துவம் பெற்றாா். 2007-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஒளி அறிவியல் மையத்தின் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
ஃபெரென்ஸ் க்ரௌஸ் (63) ஹங்கேரியை பூா்விகமாகக் கொண்ட ஃபெரென்ஸ் க்ரௌஸ், இயற்பியல் மற்றும் மின்னணு பொறியியல் நிபுணா் ஆவாா். இவா் சா்வதேச அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். கடந்த 2015-ம் ஆண்டிலேயே இவரது பெயரை நோபல் பரிசுக்கு தகுதியானவா் என்று தாம்ஸன் ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் பட்டியலிட்டிருந்தது.
ஆன் லூலியோ் (68) பிரான்ஸைச் சோ்ந்த ஆன் லூலியோ் ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியல் துறை பேராசியராக பணியாற்றி வருகிறாா். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்திலும் இயற்பியல் துறையில் முனைவா் பட்டம் பெற்றுள்ளாா். 2007 முதல் 2015 வரை இயற்பியலுக்கான நோபல் பரிசு தோ்வுக் குழுவில் இவா் இடம்பெற்றிருந்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu