பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக மரியம் நவாஸ்
பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வர் மரியம் நவாஸ்
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் மூத்த தலைவரும், மூன்று முறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக திங்கள்கிழமை பதவியேற்றார்.
50 வயதான PML-N இன் மூத்த துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு சன்னி இட்டேஹாத் கவுன்சிலின் (SIC) உறுப்பினர்கள் வெளிநடப்புக்கு மத்தியில் முதல்வர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
பாகிஸ்தானில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 327 தொகுதிகளில், மரியம் நவாஸ் தரப்பு பிஎம்எல் -என் கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி சார்பில் சுயேட்சைகளாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் மொத்தம் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி), பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ(பி.எம்.எல்-கியூ) மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி(ஐபிபி) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் மரியம் நவாஸ்.
50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தனது சித்தப்பா ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதிவியேற்றார்.
இதைத் தொடர்ந்து உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
முதல்வர் பதவிக்கான தேர்தல் நடந்த பஞ்சாப் சட்டசபைக்கு செல்வதற்கு முன், ஜாதி உம்ராவில் உள்ள தனது தாயின் கல்லறைக்கு சென்று பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu