மஹிந்த ராஜபக்ச வாழ்வில் மறக்க முடியாத மே மாதம்

மஹிந்த ராஜபக்ச வாழ்வில் மறக்க முடியாத மே மாதம்
X
அரசியலின் உச்சத்தைத் தொட்ட மஹிந்த ராஜபக்ச, அதல பாதாளத்தில் வீழ்ந்ததும் அதே மே மாதம் தான் என்பது நகைமுரண்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்சவுக்கு இந்த மே மாதம் போல எதிர்ப்பும் சறுக்கலும் நிறைந்த மாதம் இதுவரை எதுவும் இல்லை.

ஆனால், அவர் இலங்கையின் தற்கால அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க உதவியதும் ஒரு மே மாதம்தான். அது 2009 மே.

இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய உள்நாட்டுப்போர் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசுப் படைகள் வென்ற 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் குறைந்தது ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்; சுமார் 20,000 பேர் காணாமல் போயினர்.


மே 17, 2009 அன்று விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை படைகளால் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், குழந்தைப் போராளிகள், மனிதக் கேடயங்களைப் பயன்படுத்துதல் போன்ற போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டதாக கூறப்பட்ட அறிக்கைகள் சிங்கள பெரும்பான்மை மக்களிடையே அப்போதைய ஆளும் தரப்பால் கொண்டு சேர்க்கப்பட்டது.

விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சவுக்கும், ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் முக்கியமான பங்குண்டு என்றாலும் மஹிந்தவின் அரசியல் தலைமையால்தான் அது சாத்தியமானது என்று இலங்கையின் பெரும்பான்மை சமூகம் நம்பியது.

அதனை உறுதிப்படுத்துவது போல, 2010இல் அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வென்றார். அந்தத் தேர்தலில், எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தோல்வியடைந்தார்.

இந்த கால கட்டத்திற்கு பின்னர் தான், மக்களிடையே இருந்த மகிந்தவின் செல்வாக்கு சரியத்தொடங்கியது

இரண்டாவது முறை மஹிந்த ஜனாதிபதியானதும், அவரது சகோதரர், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் பதவிகள் உள்ளிட்டவை, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது .

இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாது என்ற இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்தை தமது இரண்டாவது பதவிக் காலத்தின்போது திருத்திய மஹிந்த, 2015 ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார்.

ஆனால், மைத்திரிபால சிறிசேன இந்தத் தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தி பதவிக்கு வந்ததும் அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தி, இரண்டு முறை ஜனாதிபதி பதவி வகித்தவர் மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்ற பழைய விதியை கொண்டுவந்தார். ஜனாதிபதி பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதி பதவியில் மஹிந்த இருந்ததால், 2019 ஜனாதிபதி தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் இலங்கையை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையே அதிர வைத்தன. குண்டு வெடிப்பு காரணமாக அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் செல்வாக்கு சரிந்தது. மஹிந்த ராஜபக்ச வின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவை வீழ்த்தி ஜனாதிபதியானார்.

கோத்தபய ராஜபக்ச தேர்தல் வெற்றிக்கு பௌத்த, சிங்கள பெரும்பான்மை வாக்குகள் முதன்மையான காரணமாக அமைந்தன.

நவம்பர் 2019இல் கோத்தபாய ஜனாதிபதி ஆனதும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகினார். அதன்பின் சிறுபான்மை அரசின் பிரதமராகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ச, ஆகஸ்டு 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார்.


2004ஆம் ஆண்டு சுனாமி தாக்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே இலங்கை பிரதமராக, முதல்முறை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ச, சுனாமியால் நாடு உருகுலைந்தபோதும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடை இல்லாமல் கிடைக்க செய்ததற்காக பரவலாகப் பாராட்டப்பட்டார்.

ஆனால், காலத்தின் கோலம், தற்போது உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்குக் காரணமான ஒரு பொருளாதார நெருக்கடியே இன்று மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக காரணமாகியுள்ளது என்பது முரண்நகை.

எந்த மே மாதத்தில் அவர் மாபெரும் தலைவராக பார்க்கப்பட்டாரோ, அதே மே மாதத்தில் அவரது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது.

அதே மே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயிருக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டியதாயிற்று.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!