ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு
ஜப்பான் நிலநடுக்கத்தில் சேதமடைந்த வீடுகள்
நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஜப்பானின் மேற்கு கடற்கரைப் பகுதியை ஒட்டிய இஷிகவா மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலிருந்து 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஷிகாவா மாகாணத்தில், திங்கள்கிழமை பிற்பகலில் 7.6 ரிக்டா் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் தொடா்ந்தன.
பல பகுதிகளில் சாலைகள், குடிநீா்க் குழாய்கள், ரயில் பாதைகளும் சேதமடைந்தன. இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனா்.
தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா மாகாணத்துக்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கையும் ஜப்பான் அரசு விடுத்தது. கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் அரசு எச்சரித்தது.
இந்த நிலநடுக்கத்தால் இஷிகவா மாகாணத்தில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், அதில் ஏராளமானோர் சிக்கியிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் இஷிகவா மாகாணம் கடுமையான சேதத்தைச் சந்தித்திருப்பதும், ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 62 போ் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பலா் காயமடைந்திருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலநடுக்கத்தின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகின்றது.
நிலநடுக்க தாக்கம் காரணமாக இஷிகவா மாகாணத்தின் சில பகுதிகளில் குடிநீா், மின் விநியோகமும், தொலைபேசி சேவைகளும் இரண்டாவது நாளாக தடைபட்டன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்திருப்பதும், சாலைகளில் கார்கள் தலைகீழாக புரண்டு கிடப்பதும், கடலில் கப்பல்கள் பாதி மூழ்கிய நிலையில் சேதமடைந்திருப்பதும் தொலைக்காட்சி செய்திகள் மூலம் தெரியவந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu