Israel Hamas War Update: காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டனம்

Israel Hamas War Update: காசா மருத்துவமனை மீதான தாக்குதல்:  உலக நாடுகள் கடும் கண்டனம்
X

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் 

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் மூலம் இனப்படுகொலை நடத்தப்பட்டு வருவதாக, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காசா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 12வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தெற்கு காசா பகுதியில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நேற்று நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் சிறுவர்கள் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை எனவும், ஹமாஸ் அமைப்பு தான் தவறுதலாக தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று குண்டு வெடிப்பு நடந்தது. மருத்துவமனைக்கு பின்புறத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 500 பேர் உயிரிழந்தனர். போரால் பாதிக்கப்பட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்கள் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் இஸ்ரேலால் நிகழ்த்தப்பட்டதா?, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவால் நிகழ்த்தப்பட்டதா? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலாலேயே 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை, காசா மருத்துவமனை மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை என கூறியுள்ளது. காசாவில் செயல்பட்டுவரும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ஏவிய ராக்கெட்டே காசா மருத்துவமனை மீது விழுந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடந்த சமயத்தில் நாங்கள் அந்த பகுதியில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக எங்களிடம் உள்ள பல்வேறு வழிகளில் உளவு தகவல்களை சேகரித்தோம். எங்கள் தாக்குதல் அமைப்பின் தகவல்களையும் சோதித்தோம். அதில், மருத்துவமனைக்கு அருகே இருந்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பால் வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் நோக்கி பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. அந்த ராக்கெட்டுகளில் ஒன்று தவறுதலாக காசா மருத்துவமனை உட்பகுதி மீது விழுந்துள்ளது. அந்த ராக்கெட் வெடித்து சிதறியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல் பாதுகாப்புப்படையால் நிகழ்த்தபடவில்லை. இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட்டுகளில் ஒன்று தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்து வெடித்ததே இந்த குண்டுவெடிப்புக்கு காரணம்’ என்றார்.

இஸ்லாமிக் ஜிகாத் இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட்டுகளில் ஒன்று காசா மருத்துவமனை மீது விழுந்தே இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ரேல் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்த தாக்குலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

பாலஸ்தீனம்:

மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர், "இது ஒரு இனப்படுகொலை மற்றும் "மனிதாபிமான பேரழிவு" என்று கண்டித்தார். தாக்குதல் சம்பவத்த தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் உடனான சந்திப்பை பாலஸ்தீன அதிபர் ரத்து செய்துள்ளார்.

ஜோர்டான்:

”இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டிப்பதோடு, பாலஸ்தீனிய மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சண்டையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா மருத்துவமனை மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு "படுகொலை" மற்றும் "போர்க் குற்றம்", இதில் மவுனம் காக்க முடியாது என்றும் ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

எகிப்து:

மருத்துவமனை மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்ததோடு, காசாவில் போர் விதி மீறல்களைத் தடுக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனவும் எகிப்து அரசு வலியுறுத்தியுள்ளது.

கத்தார்:

காசா பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மக்கள் தங்கியுள்ள முகாம்கள் உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்கள் விரிவடைவது ஆபத்தை அதிகரிக்கிறது, என கத்தார் அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

கனடா:

”காசாவில் இருந்து வெளிவரும் செய்திகள் பயங்கரமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்வதேச சட்டம் இதிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மதிக்கப்பட வேண்டும். போர்களைச் சுற்றி விதிகள் உள்ளன. மருத்துவமனையைத் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ”என்று கனடா பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

ஈரான்

மருத்துவமனை மீதானவான்வழித் தாக்குதல் "நிராயுதபாணி மற்றும் பாதுகாப்பற்ற மக்கள்" மீதான தாக்குதல் என ஈரான் அரசு கண்டித்துள்ளது.

துருக்கி:

"பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அடங்கிய மருத்துவமனையைத் தாக்குவது, மிக அடிப்படையான மனித விழுமியங்கள் அற்ற இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு சமீபத்திய உதாரணம். காசாவில் முன்னெப்போதும் இல்லாத இந்த கொடூரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க அனைத்து மனித இனத்தையும் நான் அழைக்கிறேன்" என துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. சபை:

”காசாவில் மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியை தருகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என ஐநா சபை தலைவர் ஆண்டனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா

”மருத்துவமனை மீதான தாக்குதல் என்பது ஒரு போர்க்குற்றம். பல்வேறு நாடுகளில் மற்றும் பல்வேறு கண்டங்களில் நடக்கும் போர்களில் இழிந்த முறையில் பணம் சம்பாதிப்பவர்களிடமே இறுதிப் பொறுப்பு உள்ளது. அந்த வகையில் காசா தாக்குதலுக்கும் அமெரிக்காவே பொறுப்பு” என ரஷ்ய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதேபோன்று ஆப்ரிக்கா யூனியன், அமெரிக்க யூனியன், அரபு லீக், உலக சுகாதார அமைப்பு மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்