மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி: ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி: ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி.
மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சுதந்திரமானது என்றும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது. இந்தியாவை நம்பகமான கூட்டாளி என்று பலமுறை வெளிப்படையாகவே ரஷ்யா கூறி வருகிறது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி செயல்பாட்டில் உள்ளன. சர்வதேச மன்றங்களில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பெரும்பாலும் இந்தியா எடுப்பது இல்லை.

இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவை பறைசாற்றும் விதமாக இந்த விவகாரங்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன. இந்த நிலையில் தான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை பாராட்டி பேசியிருக்கும் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியையும் புகழந்து தள்ளியுள்ளார். ரஷ்யாவில் உள்ள கலினின்க்ராட் பிராந்தியத்தில்ல் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் ரஷ்ய மாணவர்கள் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருப்பதாவது:-

பொருளாதார மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் இந்தியா உலக அளவில் அதிக சதவிகிதத்தை கொண்ட நாடாக உள்ளது. இதற்கு தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடியின் தலைமைத்துவே காரணம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ்தான் இந்தியா இத்தகைய கட்டத்தை எட்டியது. ரஷ்யா இந்தியாவை நம்பலாம். ஏனெனில் இந்தியாவும் அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கும் சர்வதேச விவகாரங்களில் எந்த ஒரு சித்து விளையாட்டிலும் ஈடுபடமாட்டோம் என்பதை இந்தியா உறுதி செய்து இருக்கிறது. இந்தியா சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை பின்பற்றி வருகிறது. இன்றைய உலகில் இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 1.5 பில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தியாவுக்கு இதை செய்வதற்கான உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்த உரிமையை உணர முடிகிறது.

ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு ஒரு நாட்டையோ அல்லது அதன் தலமையையோ சார்ந்தோ அல்லது அவர்களின் தேச நலன்களையும் சார்ந்து முடிவுகள் எடுக்க முடியுமா? நடைமுறை பணியில் இது மிகவும் முக்கியமானது. ஆனால், இந்தியா இதுபோன்ற விளையாட்டுக்களில் ஈடுபடாது. மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வளர்ச்சிக்கு மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்தது. மோடியின் மேக் இன் இந்தியா பிரசாரம் ரஷ்யாவில் கூட அதிகம் ஒலித்தது. இந்தியாவில் பெருமளவு அந்நிய முதலீடு ரஷ்யா மூலமே கிடைத்ததுள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் 23 பில்லியன் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்து இருக்கின்றன. இந்தியா மிகச்சிறந்த கலாசாரத்தை கொண்ட நாடு. அதன் கலாசாரம் பன்முகத்தன்மை மற்றும் வண்ணமயமானது. இந்திய படங்களை நாட்டின் தேசிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பில் சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த டிசம்பர் மாதம் 25-29 ஆம் தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்து இருந்தார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உயர் மட்ட ஆலோசனை நடைபெற்றது. ரஷ்ய அதிபர் புதின் உள்பட அந்நாட்டின் உயர் மட்ட தலைவர்களை ஜெயசங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களும் கையழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story