போர் பயிற்சிக்காக மாலத்தீவிற்கு விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில், முத்தரப்பு பயிற்சிக்காக இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மாலத்தீவுக்கு சென்றிருக்கின்றன.
புவிசார் அரசியலில் மாலத்தீவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாலத்தீவு உடனான உறவை பலப்படுத்த, ஏராளமான அளவில் இந்தியா அங்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் மாலத்தீவில் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாலத்தீவுக்கான அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது முய்ஜு வெற்றி பெற்றார்.
இவர் தேர்தல் வாக்குறுதியாக "நான் வெற்றி பெற்றால் மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன்" என்று கூறியிருந்தார். எனவே இந்திய ராணுவம் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருக்கின்றனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக அதன் அதிபர் முகமது முய்ஜு கூறியுள்ளார்.
இந்திய வீரர்களை வெளியேற சொல்லும், முய்ஜு மறுபுறம் சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டி வருகிறார். ஏற்கெனவே இலங்கையும், சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவை ஓரம் கட்டியது. தற்போது அதே வழியில் மாலத்தீவும் செல்வது, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாலத்தீவுடனான உறவை நீட்டிக்க என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தைனையையும் பயன்படுத்த இந்தியா முயன்று வருகிறது
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாலத்தீவுக்கு இந்திய போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய 3 நாடுகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு கடற்படை பயிற்சியை மேற்கொள்வது வழக்கம். இதற்கு தோஸ்தி எக்சசைஸ் என்று பெயர். கடந்த 1991ம் ஆண்டு முதல் மூன்று நாடுகளும் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. கடைசியாக 15வது தோஸ்தி எக்சசைஸ் கடந்த 2021ம் ஆண்டு நடந்தது.
இந்நிலையில் 16வது தோஸ்தி எக்சசைஸ் தற்போது தொடங்கியுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. இதற்காக இந்தியாவின் ஐசிஜிஎஸ் சமர்த், ஐசிஜிஎஸ் அபிநவ் போர் கப்பல்களும், டோர்னியர் ரக விமானம் ஒன்றும் மாலத்தீவுக்கு சென்றிருக்கிறது. இலங்கை, எஸ்எல்என்எஸ் சமுத்ரா எனும் கப்பலுடன் இணைந்திருக்கிறது. அதேபோல இந்த முறை வங்கதேசம் பார்வையாளராக இந்த பயிற்சியில் பங்கேற்றிருக்கிறது.
இந்திய கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் எஸ்.பரமேஷ் பயிற்சிக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார். மாலத்தீவில் மூன்று நாடுகளும் கூட்டு பயிற்சியில் ஈடுபடும். தனக்கும் மாலத்தீவுக்குமான உறவை பலப்படுத்த இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மறுபுறம் இந்தியாவின் இந்த நடவக்கைகளை சீனா உற்றுநோக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu