பிரதமரின் பிரான்ஸ் பயணத்தில் வெளியிட்ட "இந்தியா - பிரான்ஸ் கூட்டறிக்கை"

பிரதமரின் பிரான்ஸ் பயணத்தில் வெளியிட்ட இந்தியா - பிரான்ஸ் கூட்டறிக்கை
X
ஜனநாயக மாண்புகள், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள இருதரப்பினரும் உறுதி பூண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, குறுகிய கால பயணமாக மே 4, 2022 அன்று பாரீஸ் பயணம் மேற்கொண்டபோது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவரை வரவேற்றார். ஜனநாயக மாண்புகள், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள இருதரப்பினரும் உறுதி பூண்டனர்.

பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில், உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்ள புதிய தளங்களில் தங்களின் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், சர்வதேச பங்களிப்பை விரிவுப்படுத்தவும் இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இந்தியா – பசிபிக் பிராந்தியத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு மதிப்பளிக்கவும், சுதந்திரமான கடல் வழிப் போக்குவரத்துக்கும், பதற்றம், மோதல்கள் இல்லாத பிராந்தியத்திற்கும், தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்டுள்ளன.

பாதுகாப்பு, பந்தோபஸ்து, வர்த்தகம், முதலீடு, போக்குவரத்துத் தொடர்பு, சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தியா –பிரான்ஸ், இந்தியா - பசிபிக், பங்களிப்பு உள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியா ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சபைக்கு இருநாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப்படைகளின் சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ள இந்தியாவும், பிரான்சும், உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவும், அவை வலியுறுத்தியுள்ளன.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உணவு நெருக்கடி அதிகரித்திருப்பதற்கு தீர்வு காண ஒருங்கிணைந்த பலதரப்பு முயற்சிகளை மேற்கொள்ள இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவம் கொண்ட அரசு அமையவும், பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்திய பெருங்கடல் முழுவதும், பயிற்சிகள், பரிமாற்றங்கள், கூட்டு முயற்சிகள் ஆகியவை தொடரும் என்று இருநாடுகளும் அறிவித்துள்ளன.

பாரீசில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய டிஜிட்டல் கண்காட்சியான விவாடெக்கில் முதலாவது நாடாக இந்தியா கலந்து கொள்ள இருக்கிறது.

பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பின் ஒரு மைல் கல்லாக "பயங்கரவாதத்திற்கு பொருளுதவி செய்வதில்லை" என்பது குறித்த 3-வது சர்வதேச மாநாட்டை இந்த ஆண்டு இந்தியா நடத்தவுள்ளது.

ஜி-20 கட்டமைப்பில் வலுவான ஒருங்கிணைப்பை பராமரிக்க இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ஐநா பாதுகாப்பு சபை மற்றும் அணு விநியோக குழு ஆகியவற்றில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் கோரிக்கைக்கு பிரான்ஸ் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

குடிபெயர்தல் மற்றும் போக்குவரத்துத் தொடர்பான பங்களிப்பு ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை தொடரவும், இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளன. இருதரப்பு மாணவர் பரிமாற்ற இலக்காக 2025-க்குள் 20,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் பராமரிக்க உள்ளது. இதனால், இருநாடுகளுக்கு இடையே புதிய வணிகம், புதிய தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் உருவாகும்.

பாரீஸ் புத்தகத்திருவிழா 2022-ல் இந்தியா கவுரவ விருந்தினராக இருந்தததைப் போல புதுதில்லியில் அடுத்து நடைபெறும் உலக புத்தக கண்காட்சியில், பிரான்ஸ் கவுரவ விருந்தினராக அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!