ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர்

அமெரிக்காவில், வன்முறைக்கு பலியான போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் நினைவாக, தபால் நிலையத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில், ஹாரிஸ் பகுதியின் துணை போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர், சந்தீப் சிங், 42.இவர், 2019ல் ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமான ஒரு காரை மடக்கினார். அப்போது, காரில் இருந்தவர் துப்பாக்கியால் சுட்டதில், சந்தீப் சிங் உயிரிழந்தார்.

டெக்சாஸ் மாகாணத்தில், முதன் முதலாக சீக்கியர்களின் பாரம்பரிய டர்பன் மற்றும் தாடியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டவர், சந்தீப் சிங்.கடமை தவறாத, நேர்மையான அதிகாரியான சந்தீப் சிங்கின் சேவையை கவுரவிக்கும் வகையில், மேற்கு ஹூஸ்டன் நகரில், ஹாரிஸ் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு, சந்தீப் சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான விழா நேற்று நடந்தது.

இதில், சந்தீப் சிங் பெயரை தபால் நிலையத்திற்கு சூட்டுவதற்கான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றிய எம்.பி. லிசி பிளட்சர், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சந்தீப் சிங்கின் தந்தை பியாரா சிங் தலிவால் பேசும்போது, ''வன்முறையால் மகனை இழந்த எனக்கு அன்பும், ஆதரவும் காட்டி வரும் இப்பகுதி மக்களுக்கு நன்றி.தபால் நிலையத்திற்கு என் மகன் பெயர் சூட்டப்பட்டதை, மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்,'' என்றார்.

Tags

Next Story