பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருடம் சிறைத்தண்டனை
இம்ரான்கான்.
சைபர் கேபிள் சேவை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி இன்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் வீரரான இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி உலககோப்பை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான் கான் அரசியலில் நுழைந்தார். தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கினார்.
இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைத்த இம்ரான் கான் பிரதமரானார். இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பின்னர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதில் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த வருடம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் இம்ரான் கான் வெளிவர முடியவில்லை. ஏனென்றால் இன்னொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதாவது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் பிரதமராக இருக்கும் நபர் உயரதிகாரிகளுடன் விரைவாக பேசும் வகையில் சைபர் கேபிள் சேவை பயன்பாடு உள்ளது. இந்த கேபிள் சேவையை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் இம்ரான் கான் மீதான சைபர் கேபிள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை என்பது அஸ்தமனமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu