நான் மர்மமாக இறந்தால்... பகீர் டிவிட் போட்டு எலன் மஸ்க் பரபரப்பு
எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான, அமெரிக்காவை சேர்ந்த எலன் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை விரைவில் தன் வசமாக்கவுள்ளார்.
இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர், அவ்வப்போது ஏதாவது பகீர் தகவலை வெளியிட்டு 'பீதி' கிளப்புவார். அது பெரும் பரபரப்பை கிளப்பும்.
சமீபத்தில், கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக, அண்மையில் கூறிவிட்டு, எல்லாம் தமாஷ் என்றார். ஆனால், எலன் மஸ்க் விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ கூறியதை எல்லாம், பின்னர் நிஜமாக செய்து காட்டி இருக்கிறார் என்பதால், அவற்றையெல்லாம் புறந்தள்ளவும் முடியாது.
இந்த சூழலில், எலன் மஸ்க் இன்று போட்ட டிவிட், பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் இன்று டிவிட்டர் பதிவில், "நான் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தால், இதை பற்றி அறிவது நன்றாக உள்ளதல்லவா.." என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மஸ்க் தனது ட்வீட்டிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, டெஸ்லா தலைமை செயல் அலுவலர், "உக்ரைன் நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ராணுவ தகவல் தொடர்பு சாதனங்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளார்," என்று ஒரு ரஷ்ய அலுவலருடன் உரையாடுவது போன்ற பதிவைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பதிவில், "உக்ரைனில் உள்ள பாசிச படைகளுக்கு ராணுவத் தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்குவதில் எலன் மஸ்க் ஈடுபட்டுள்ளார். நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக விளையாடினாலும் சரி, இதற்கு நீங்கள் பொறுப்பேற்கப்படுவீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டுக்கு எலன் மஸ்க் உதவியதற்காக, ரஷ்யாவால் இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை பலரும் கிளப்பியுள்ளனர்.
கடந்த பிப்ரவரியில், உக்ரைனில் எலன் மஸ்க் உதவியுடன் அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைக்கு பயன்படுத்தப்பட்டது. இதே போன்ற பல உதவிகளை அவர் உக்ரைனுக்கு செய்தார்.
எலன் மஸ்கின் பதிவுகளை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையையும் , அவருக்கு எதுவும் நேரிடக்கூடாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்று பலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu