சீனாவில் மீண்டும் நில நடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆனது

சீனாவில் மீண்டும் நில நடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆனது

நில நடுக்கம் ஏற்பட்டதால் சரிந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி.

சீனாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் அடுத்ததாக 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் சீனாவில் வசிக்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் வடமேற்கு பகுதிகள் என்பது மலை பிரதேசமாக உள்ளது. இங்கு தான் கன்சு மற்றும் கிங்காய் உள்ளிட்ட மாகாணங்கள் உள்ளன. இந்நிலையில் தான் நேற்று இரவு 11.59 மணிக்கு திடீரென்று அங்குள்ள கட்டடங்கள் குலுங்கி உள்ளன.

இதையடுத்து இரவில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் தூங்கியவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்போது சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும், 100க்கும் அதிகமானவர்கள் கட்டடங்களில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மீட்பு பணிகள் தொடங்கின. கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி என்பது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தான் அங்குமீண்டும் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதாவது கிங்காய் மகாணத்தின் எல்லை பகுதியான ஹைதாங் எனும் இடத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கி உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகி உள்ளது. இதில் கன்சு மாகாணம் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில் கிங்காய் மாகாணமும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மேலும் இன்று காலை 7.50 மணி நிலவரப்படி கன்சு மகாணத்தில் மட்டும் 105 பேர் பலியாகி இருப்பதும், 370 பேர் படுகாயமடைந்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் 4,700 வீடுகள் இடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக கிங்காய் மகாணத்தில் 11 பேர் வரை இறந்தது தெரியவந்தது. இதன்மூலம் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 116 என உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 மாகாணங்களில் மீட்பு பணி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சின்ஜியாங் பகுதியில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் பகுதியில் இந்த நிலநடுக்கம் 5.5 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. அங்கு ஏற்பட்ட சேதபாதிப்புகள் குறித்த விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இப்படி தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் சீனா மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவின் இமயமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நில நடுக்கம் ஏற்பட்டது. மேலும் டெல்லியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் அந்த நாட்டின் இரண்டு மாகாணங்களையே புரட்டி போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக சீனா ஒரு கம்யூனிச நாடு என்பதால் அங்கு என்ன நடந்தாலும் வெளி உலகிற்கு தெரிவது இல்லை. அந்த நாட்டு கம்யூனிஸ்டு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் செய்திகள் தான் வெளி உலகிற்கு சொல்லப்படும். அங்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நடத்துவதற்கு தனியாருக்கு அனுமதி இல்லை என்பதால் நில நடுக்கத்தில் உயிரிழப்பு எத்தனை பேர் என்ற விவரங்கள் பற்றிய தகவல் முழுமையாக வெளிவரவில்லை.

Tags

Next Story