ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் நிலை: இருநாட்டு கல்வி அமைச்சர்கள் கலந்துரையாடல்

ஆஸ்திரேலிய கல்வி மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சருடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார்.

ஆஸ்திரேலியாவின் கல்வி மற்றும் இளைஞர் துறை அமைச்சர் ஆலன் டட்ஜுடன் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் நேற்று உரையாடினார்.

உயர் கல்வித்துறையில் வளர்ந்து வரும் ஆஸ்திரேலியா-இந்தியா கூட்டை வலுப்படுத்துவதற்காக இருதரப்பு மாணவர் போக்குவரத்து, ஆசிரியர் பரிமாற்றங்கள், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பரஸ்பர முன்னுரிமை உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டிற்கு மீண்டும் செல்வது குறித்து தர்மேந்திர பிரதான் பேசினார். இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதை எளிதாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் அவருக்கு விளக்கினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிப்பதற்கான உறுதியை அமைச்சர்களும் வெளிப்படுத்தினர்.

நமது இளைஞர்களின் லட்சியங்களையும் எதிர்காலத் தேவைகளையும் உணர்ந்து உலகளாவிய அறிவு மையமாக இந்தியாவை மாற்றுவதில் தேசிய கல்விக்கொள்கை, 2020 உதவியாக இருக்கும் என்பதை பிரதான் வலியுறுத்தினார். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலை கல்வி மற்றும் திறன் துறை கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!