உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தியது கத்துக்குட்டி நமீபியா

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தியது கத்துக்குட்டி நமீபியா
X
இலங்கையை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் நமீபியா கிரிக்கெட் அணி வீரர்கள்.
உலக கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது கத்துக்குட்டி அணியான நமீபியா.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 20 ஓவர் போட்டிக்கு அதிக வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. முதல் உலகக் கோப்பையை எம்.எஸ். டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அனைவரது கவனத்தையும் பெற்றது.


உலக கோப்பை கிரிக்கெட்

கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வெஸ்ட் இன்டீஸ், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, யு.ஏ.இ, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 16 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.

இதில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்று பிரிவில் பங்கேற்கும். மீதமுள்ள இலங்கை, வெஸ்ட் இன்டீஸ், நமீபியா, நெதர்லாந்து, அயர்லாந்து, யு.ஏ.இ, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஆகிய 8 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியா பாகிஸ்தான் எப்போது?

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் மொத்தம் 45 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 13.9 கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 6.6 கோடியும், அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் மற்ற இரண்டு அணிகளுக்கு தலா ரூ. 3.3 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

கலக்கிய கத்துக்குட்டி

இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை அணியும், கத்துக்குட்டி அணியான நமீபியாவும் மோதின. சிட்னி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நமீபியா அணியின் தொடக்க வீரர்களான மிச்சேல் வான் லிங்கன் 3 ரன்களிலும், டிவென் லா காக் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அந்த அணியின் வீரர்கள் ஜான் நிகோல் 20 ரன்களும், ஸ்டீபன் பார்ட் 26 ரன்களும், ஜெர்கார்ட் இராமஸ் 20 ரன்களும், ஜான் பிரைலிங்க் 44 ரன்களும், ஸ்மித் 31 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் பிரமோத் மதுசன் லியனகமகே 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்சனா, சமீரா, கருணரத்னே, ஹசரங்கா டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியை அளித்தது நமீபியா அணி வீரர்களின் பந்து வீச்சு. தொடக்க வீரர்களான பதும் நிசாங்கா 9 ரன்களிலும், குசல் மென்டில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பனுகா ராஜபக்சே 20 ரன்களும், டசன் சனகா 29 ரன்களும் சேகரித்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களின் தங்களது விக்கெட்டுகளை இழந்தன.

அதிர்ச்சி

ஆட்டத்தின் 19 ஆவது ஓவரியில் இலங்கை அணி 108 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இலங்கை அணி எளிதில் நமீபியா அணியை வீழ்த்தி விடும் என எதிர்பார்த்த நிலையில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணிக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கே அதிர்ச்சியை அளித்துள்ளது நமீபியா அணி.

கத்துக்குட்டி அணி என கருதப்பட்ட நமீபியா அணி உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்திலேயே ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை அணியை வீழ்த்தி இருப்பது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எப்போது வேண்டுமானாலும் வெற்றி கை மாறலாம் என்பதையே காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நமீபியா அணியின் ஆல் ரவுண்டரான ஜன் பிரைலிங்க் 28 பந்துகளில் 44 ரன்களை குவித்ததோடு, சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா, சனகா ஆகிய முக்கிய வீர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றிதால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இன்னும் என்ன நடக்குமோ?

ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தியது தங்களது அணி வீரர்களின் ஓட்டு மொத்த சிறப்பான செயல்பாடே காரணம் என நமீபியா அணியின் கேப்டன் ஜெர்கார்ட் இராமஸ் தெரிவித்துள்ளார். இதுவரை பெரிய பலம் கொண்ட எந்த அணியையும் வெல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த இலங்கை அணியை வீழ்த்திய கத்துக்குட்டி அணியான நமீபியா இன்னும் என்னவெல்லாம் சாதனையை பெறப்போகிறதோ? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!