நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர நிரவ் மோடிக்கு இங்கிலாந்து ஐகோர்ட் அனுமதி

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர நிரவ் மோடிக்கு இங்கிலாந்து ஐகோர்ட் அனுமதி
X

வைர வியாபாரி நிரவ் மோடி

நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக பணமோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுதவிர வங்கிகளில் இவர் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி செலுத்தவில்லை. சி.பி.ஐ. விசாரணையை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

சி.பி.ஐ. வேண்டுகோளின்பேரில், அங்கு கைது செய்யப்பட்டார். லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த இங்கிலாந்து ஐகோர்ட், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவர் இங்கிலாந்து ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம். அவர் தற்கொலை செய்துகொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற ஐகோர்ட், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story