சீனாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
இந்த பாதிப்புகளால், அந்த நாட்டில் பெரிய அளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயண கட்டுப்பாடுகளையும் விதிக்கவும் அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் இந்த பாதிப்பு எண்ணிக்கை மிக சிறிய விகிதத்திலேயே உள்ளது என கூறப்படுகிறது. சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் 225-க்கும் கூடுதலான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் உலக நாடுகள் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சீனாவில் 29,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 26,438 பேருக்கு அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதற்கு முன்தினம் 28 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு தொற்று பதிவானது. இதனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.
சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,93,506 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் நேற்று ஏற்பட்ட 29,390 என்ற கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஏப்ரல் மத்தியில் பதிவான எண்ணிக்கையை விட அதிகமாகும் கூடுதலாகும்.
ஆனால் பெய்ஜிங்கின் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் கீழ், சிறிய பாதிப்புகள் கூட முழு நகரங்களையும் மூடலாம் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொடர்புகளை கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கலாம்.
இதுபோன்ற காரணங்களால் மக்கள் உணவு வாங்க அல்லது மருத்துவ உதவிகளை நாட இயலாமல் போராட கூடிய சூழல் ஏற்படும். அந்நாட்டில் 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை பரிதவிப்பில் ஆழ்த்தி உள்ளது. உலகின் 2-வது பொருளாதார நாடு என்ற பெருமை பெற்ற சீனா, மீண்டும் கொரோனா பெருந்தொற்றுக்கு இலக்காகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu