மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமரை சந்தித்தனர்
கஜக்ஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். மூன்றாவது இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதுதில்லிக்கு வருகை தந்துள்ளனர்.
தங்கள் நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் தெரிவித்த வாழ்த்துச் செய்திகளை மத்திய ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் , பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர். தங்கள் நாட்டு தலைவர்கள் இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தயாராக இருப்பதையும் வலியுறுத்தினர். வணிகம், போக்குவரத்துத் தொடர்பு, வளர்ச்சி பங்களிப்பு, ஆப்கானிஸ்தான் நிலைமை உள்பட பிராந்திய நிகழ்வுப் போக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சர் தலைமையில் 2021,டிசம்பர் 18-19 தேதிகளில் நடைபெற்ற இந்தியா-மத்திய ஆசிய பேச்சுவார்த்தையின் தீர்மானங்கள் குறித்துப் பிரதமரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்தியாவின் 'விரிவடைந்த அண்டை நாடுகள்' என்பதன் பகுதியாக உள்ள மத்திய ஆசிய நாடுகளுடனான நீடித்து நிலைக்கும் உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதை பிரதமர் வலியுறுத்தினார். இந்நாடுகளுக்கான 30-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுவதை அடுத்து இந்த அமைச்சர்களிடம் தமது வாழ்த்துக்களைத் தெரி்வித்தார். 2015-ல் மத்திய ஆசிய நாடுகள் அனைத்திற்கும் அதைத் தொடர்ந்து கஜக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ் குடியரசு ஆகியவற்றுக்கும் தமது பயணங்களை அவர் நினைவுகூர்ந்தார். இந்த பிராந்தியத்தில் இந்தியத் திரைப்படங்கள், இசை, யோகா மற்றும் பிற பிரபலமாக இருப்பதை தெரிவித்த பிரதமர், இந்தியா- மத்திய ஆசியா இடையே மக்கள் தொடர்புகள் மற்றும் கலாச்சார பராமரிப்பின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டினார். இந்தியா-மத்திய ஆசியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு விரிவுப்படுத்தப்பட்டிருப்பதையும் இது தொடர்பாக போக்குவரத்துத் தொடர்பின் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா- மத்திய ஆசிய பேச்சு வார்த்தை இந்தியா, மத்திய ஆசிய நாடுகளுக்கிடையே மிகச்சிறந்த இருதரப்பு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தங்களின் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 30-வது ஆண்டினை இந்தியாவும், மத்திய ஆசிய நாடுகளும் அடுத்த ஆண்டு கொண்டாடவுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu