உக்ரைன் மீது வரும் 16-ந் தேதி ரஷ்யா படையெடுக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது வரும் 16-ந் தேதி ரஷ்யா படையெடுக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
X

மாதிரி படம் 

உக்ரைன் மீது ரஷ்யா வருகிற 16-ந் தேதி படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரித்ததையடுத்து, பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளன

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன.

இதனால் உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷ்யா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருவதை ரஷ்யா மறுத்துள்ளது.

இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், சீனாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும். வருகிற 20-ந் தேதிக்கு முன்பாக ரஷியா, உக்ரைன் மீது படையெடுக்கலாம். அந்த வகையில் 16-ந் தேதி ரஷியா தனது படையெடுப்பை தொடங்கும் என தெரிகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இந்த தேதியை அவர்களிடம் அவர் குறிப்பிட்டு கூறினார் என தெரிவித்தனர்.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், படையெடுப்பு வான்வழி தாக்குதலோடு தொடங்கலாம் என்பதால், தாமதிக்காமல் உடனடியாக வெளியேறுவது நல்லது என கூறப்பட்டுள்ளது. அதே போல் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை காலி செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே படையெடுப்பு குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உக்ரைனில் இருக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளன.

இதற்கிடையில் உக்ரைனுக்கான ரஷ்ய தூதர் மற்றும் அங்குள்ள ரஷ்ய தூதரகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று முதல் அங்கிருந்து வெளியேற தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டி வரும் நிலையில், அச்சுறுத்தலை சமாளிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு வலு சேர்ப்பதற்காக போலந்து நாட்டின் எல்லைக்கு அமெரிக்கா கூடுதலாக 3 ஆயிரம் படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!