பாகிஸ்தானை போல் இன்னொரு தலைவலி நாடாக உருவாக போகிறது வங்காள தேசம்
நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய கலவரமாகமாறி ராணும் ஆட்சியை பிடித்து உள்ளது. அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இப்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்பும் நோக்கமும் இந்தியாவில் தங்கி இருப்பது இல்லை என்றாலும் அவர் விரும்பும் ஒரு நாடு அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன் வரும் வரை அவர் இந்தியாவில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது நடந்த படுகொலைகள் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு ஷேக் ஹசீனா ஆஜராக அவரை வங்கதேசத்துக்கு இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வங்கதேச தேசியவாத கட்சி வற்புறுத்தி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் வங்கதேச தேசியவாத கட்சியின் ஆதரவுடன் அமைந்திருக்கும் புதிய இடைக்கால அரசே அதிகாரப்பூர்வமாக இந்த கோரிக்கையை முன் வைக்கும் .இன்னும் சொல்லப்போனால் இந்தியா வங்கதேச உறவு தொடர்வதற்கான பணயமாக ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை அந்த நாடு முன் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தன் மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜராக ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருந்தாலும் வங்கதேசத்தில் இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு விசாரணை வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடக்குமா என்றால் அது சந்தேகமே.
ஷேக் ஹசீனா மீது வங்கதேசம் சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் 100% உண்மையாகவே இருந்தாலும் கூட அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்று கூறும் உரிமை ஷேக் ஹசீனாவுக்கு இருக்கிறது. அந்த உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வங்கதேச தேசியவாத கட்சியின் கோரிக்கை நகைப்பிற்குரியது தான்.
வங்காளதேசத்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று திரும்பிப் பார்த்தால் 1971 போரில் பாகிஸ்தானிடம் இருந்து விடுபட்டு வங்காளதேசம் என்ற ஒரு தேசத்தை கட்டமைத்த வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. தலைநகர் டாக்காவில் இருந்த அவரது நினைவு இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 1971 போர் நினைவருங்காட்சியகம் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது .வெளிப்படையாக சொல்வதென்றால் வங்கதேசத்தில் 1971ல் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடந்த போராட்டத்தின் சுவடுகள் எல்லாம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன .
அதன் நோக்கம் பாகிஸ்தான் இருந்து பிரிந்து தனி நாடானதை ரத்து செய்துவிட்டு மீண்டும் பாகிஸ்தானுடன் இணையும் திட்டமாக இருக்காது என்றாலும் பாகிஸ்தானுடன் உறவு இன்னும் நெருக்கமாகும் .பாகிஸ்தான் உடனான போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்காக தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இனி புதிய பெயர்களில் வெளிப்படையாக செயல்பட ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழலில் நமக்கு உறுதியான கூட்டாளியாக இருந்த ஒரு தலைவரை ஒப்படைக்க மறுப்பதில் இந்தியா உறுதியாக நிற்க வேண்டும்.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான உணர்வு கொண்ட அமைப்புகளிடமிருந்து இத்தகைய கோரிக்கைகள் வரும்போது கவனம் கொள்ள வேண்டும். நமது அண்டை நாடுகளை பொறுத்த வரை அவை நமக்கு எப்போதும் தலைவலியாகவே இருந்து வருகின்றன. பாகிஸ்தான் நிரந்தர தலைவலி என்றால் தற்போது வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் மூலமும் ஷேக் ’ ஹசீனா பதவி இழந்ததன் மூலமும் புதிதாக ஒரு தலைவலி பாகிஸ்தானை போல் உருவாக தொடங்கி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
அந்த தலைவலி திருகு வழியாக மாறுவதற்குள்ளாக ராஜதந்திர ரீதியாக சமாளிக்க வேண்டியது பிரதமர் மோடியின் கடமையாகும். அண்டை வீடும் அண்டை நாடும் சரியாக அமைந்துவிட்டால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப சரியான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu