கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
கோப்புப்படம்
அஸ்ட்ரஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட பலர் உயிரிழந்ததாகவும், பலருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அஸ்ட்ரஜெனகா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் மிக அரிய வகையாக டிடிஎஸ் எனப்படும் ரத்த உறைதல் மற்றும், ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் வரை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் நிவாரணம் வழங்க வேண்டி வரும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கின் புகார்தாரர் ஜேமி ஸ்காட் என்பவர், கடந்த ஏப்ரல் 2021ஆம் ஆண்டு முதன் முதலாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும் அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது இதை மறுத்த நிறுவனம் தற்போது மிக அரிதாக டிடிஎஸ் உள்ளிட்ட பக்கவிளைவுகளை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்து உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியது. தடுப்பூசிக்கான உரிமையை பெற்ற இந்தியாவின் சீரம் நிறுவனம் அதை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டு வந்தது. மேலும், இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இந்த கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலின் போது நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியை தவிர்த்து மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது.
இதன் செயல்திறன் 81 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என இதை தயாரித்த சீரம் நிறுவனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu