ரஷிய ராணுவத்தினர் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இந்திய இளைஞர் பலி
உக்ரைன் தாக்குதலில் இந்திய இளைஞர் பலியான இடம்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தியர்களின் உயிர்கள் பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து சென்ற இளைஞர் ஒருவர் ரஷ்யா போர் முனையில் உயிரிழந்திருக்கிறார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு போர் களத்தில் இறக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
இப்படி இருக்கையில் சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார். 23 வயதான ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா, குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு, ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்கள் தேவை என்கிற விளம்பரத்தை பார்த்து, ஏஜென்சிகள் மூலம் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு மாதம் ரூ.2.3 லட்சம் சம்பளம் கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக அவருக்கு ரஷ்ய ராணுவம் சார்பில் துப்பாக்கி சுடுதல், வெடி பொருட்களை கையாளுதல் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் கடந்த 21ம் தேதி அவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடன் பணியாற்றிய மற்றொரு இந்திய இளைஞரான சமீர் அகமது நடந்த சம்பவம் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது, "நானும், மற்ற சில இந்தியர்களும் பதுங்கு குழியை தோண்டிக்கொண்டிருந்தோம். எங்களிடமிருந்து 150 மீட்டர் தொலைவில் ஹெமில் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எங்கள் தலைக்கு மேல் ட்ரோன் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது. திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. எனவே நாங்களும், எங்களுடன் இருந்த ரஷ்யர்களும் பதுங்கு குழிக்குள் ஒளிந்துக்கொண்டோம். அது ஒரு ஏவுகணை தாக்குதல். பூமி அப்படியே அதிர்ந்தது.
சத்தம் ஓய்ந்த பின்னர் நாங்கள் குழியை விட்டு வெளியே வந்தோம். ஹெமில் உயிரிழந்திருந்தார். அவனது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. தலையில் பலத்த அடிபட்டிருந்தது. அவன் உயிரிழந்துவிட்டான். அவனது உடலை நான்தான் டிரக்கில் ஏற்றி அனுப்பி வைத்தேன்" என்று கூறியுள்ளார்.
இவர்களுடன் வேலை பார்க்கும் மற்றொரு இந்திய இளைஞர் ஹெமிலின் சடலத்தின் படங்களை பகிர்ந்துள்ளார். ஹெமிலை ரஷ்ய ராணுவ தளபதி மிகவும் நம்பியதாக சொல்லப்படுகிறது. எனவே ஹெமிலுக்கு அடிமட்ட வேலைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் சக இந்திய இளைஞர்கள் கூறுகின்றனர். ஹெமிலிடம் அவரது தந்தை கடைசியாக கடந்த 20ம் தேதி பேசியிருக்கிறார். அதன் பின்னர், தனது மகனை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தை நாடியிருந்தார். ஹெமில் கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள ரஷ்ய பயிற்சி மையத்தில்தான் பயிற்சி பெற்று வந்திருந்தார். இங்கு கடந்த 21ம் உக்ரைன் நடத்திய தாக்குதலில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம்தான் கூலிக்காக இந்திய இளைஞர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் இருப்பது உறுதி படுத்தப்பட்டது. அவர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்திய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu