மூணே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா! திணறும் வடகொரியா
வடகொரியா கொரோனா தடுப்பு குழு
உலகம் முழுவதும் கொரோனா தாக்கிய போதும் கூட, கடந்த 2 ஆண்டுகளாக தனது நாட்டில் பாதிப்பு இல்லை என வட கொரியா கூறி வந்தது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வடகொரியாவில் வாழும் இரண்டரை கோடி மக்களில் யாருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை
சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை வடகொரியா நிராகரித்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது, கடந்த 12 ஆம் தேதி வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுதான் அந்நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு.
இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தினார். 1.87 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் அடுத்த நாளே, கொரோனாவுக்கு பலியானார். அதனைத்தொடர்ந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. கடந்த 3 நாட்களில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர்.
வடகொரியாவில் மொத்த மக்கள் தொகையே 2 கோடியே 60 லட்சம் தான் என்கிற் நிலையில் அங்கு யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அத்துடன் அங்கு போதுமான மருத்துவ வசதிகளும் இல்லை. உடனடியாக வெளிநாடுகளிடமிருந்து தடுப்பூசி, மருந்துகள் கிடைக்காவிட்டால் இன்னும் ஏராளமானோர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் அதிபர் கிம் ஜாங் உன் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். அதேநேரம் வடகொரியாவுக்கு தேவைப்படும் மருந்தை வழங்கம் தயாராக இருப்பதாக சீனாவும், தென்கொரியாவும் தெரிவித்திருந்தாலும், வடகொரியா தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu