ஆப்பிரிக்க நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் உயிரிழப்பு
X
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும்.

இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். எனவே அந்த ஆற்றில் ஏராளமான படகுகள் சவாரி செய்கின்றன. ஆனால் அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

இந்தநிலையில் பாங்குய் நகரில் உள்ள ஒரு உள்ளூர் தலைவர் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாங்குய் நகரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் படகில் புறப்பட்டனர்.

புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் இருந்த குழந்தைகள், பெண்கள் என பலர் ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

இதனையறிந்த உள்ளூர் மீனவர்கள் உடனடியாக தங்களது மீன்பிடி படகு மூலம் மீட்க முயன்றனர். இதற்கிடையே மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் இந்த சம்பவத்தில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது படகு கவிழ்ந்து 58 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil