காட்டில் தொலைந்த சிறுவர்கள்: 40 நாட்களுக்கு பின் மீட்பு
40 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளுடன் மீட்புப்படை வீரர்கள்
கொலம்பிய அமேசான் மழைக்காடுகளில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயிருந்த நான்கு பழங்குடியின குழந்தைகள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
"நாடு முழுவதும் மகிழ்ச்சி! கொலம்பிய காட்டில் 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்," என்று அவர் ட்விட்டரில் கூறினார்
கடந்த மே 1 ம் தேதி ஒற்றை இன்ஜீன் கொண்டசிறிய ரக விமானம் ஒன்று, 6 பயணிகள் மற்றும் ஒரு பைலட்டுடன் கொலம்பியாவில் இருந்து கிளம்பி அமேசான் காட்டின் மேல் பறந்து கொண்டிருந்தது. சான் ஜோஸ் டெல் குவேரியார் நகருக்கு 350 கிலோமீட்டர் (217-மைல்) பயணத்தில் அரராகுவாரா எனப்படும் காட்டுப் பகுதியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜின் கோளாறுகள் ஏற்பட்டது.
அப்போது, எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் குழந்தைகளின் தாய், பைலட் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த நிலையில், லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜெகோபோம்பேர் (9), டியன் ரனோக் முகுடி (4)மற்றும் கைக்குழந்தையான கிறிஸ்டின் ரனோக் ஆகிய 4 பேர் மாயமானார்கள்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விமானி, குழந்தைகளின் தாய் மற்றும் உள்ளூர் பழங்குடியின தலைவர் ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அங்கு விமானம் மரங்களில் ஏறக்குறைய செங்குத்தாக இருந்தது
160 ராணுவ வீரர்கள் மற்றும் 70 பழங்குடியினர் காடுகளை பற்றி அறிந்தவர்கள் இணைந்து பெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
விமானத்தின் பாகங்கள் சிதறி கிடந்த பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்டன. 4 குழந்தைகளின் நிலை தெரியவில்லை. அப்பகுதியில் தேடுதல் வேட்டையில், குழந்தைகளின் உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, பூர்வகுடிகள் உதவியுடன் தேடுதல் பணியை ராணுவம் முடுக்கிவிட்டது. தன்னார்வலர்களும் இணைந்தனர்.
அதன்படி 40 நாட்களுக்கு பிறகு, குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனை கொலம்பியா அதிபர் பெட்ரோ உறுதி செய்துள்ளார். மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை கொலம்பிய அரசு பகிர்ந்தது. அதில், பரிதாபமாக காட்சியளித்த குழந்தைகளுடன் ராணுவ வீரர்கள், பூர்வக்குடிகள், தன்னார்வலர்கள் இருந்தனர்.
அமேசான் காட்டில் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதற்கு அந்நாட்டு மக்கள் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu