எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது - ஸ்டீபன் ஹாக்கிங்

எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது  - ஸ்டீபன் ஹாக்கிங்
X
முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளக்கியவர் ஸ்டீபன் ஹாக்கிங். உலகின் முக்கியமான அறிவியல் அறிஞரான அவரது வாழ்க்கை அழகான காதலும், ஆழமான வலியும் கொண்டவை. இன்று அவருடைய பிறந்தநாள் .

பிரிட்டனில் 1942ம் வருடம் ஜனவரி 8ம் தேதி பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.

துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழுஉற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகளும் பிறந்தன.

ஏ.எல்.எஸ் எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாக செயலிழந்தது. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். 'A Brief History of Time' என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணிணி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணிப்பொறி மென்பொருள் கண்டுபிடித்து சக்கர நாற்காலியில் பொருத்தித் தர சிரமம் குறைந்து. அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

'காலம் எப்போது துவங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?' என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வு, மருத்துவர்களுக்கு கடைசி வரை ஒரு புதிர்தான். உடல்நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனமம் தளராமல் தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.

இவரது மந்திரச் சொல், "எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது".

கட்டுரையாளர் : மைக்கேல் ராஜ்

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!