சென்னையில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் கொட்டி தீர்த்தது 34 செ.மீ
சென்னையில் வரலாறு காணாத மழையாக ஒரே நாள் இரவில் 34 செ.மீ. கொட்டி தீர்த்து உள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி உள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்திருந்தது.
அந்த எச்சரிக்கையின்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை 10 மணி வரை கனமழை கொட்டி தீர்த்து உள்ளது. மிக்ஜாம் புயலானது சென்னைக்கு அருகே 290 கிலோமீட்டர் தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு அல்லது நாளை ஆந்திர மாநிலத்தின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் புயலின் தாக்கம் சென்னையை புரட்டி போட்டு வருகிறது.
ஒரே நாள் இரவில் 34 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள், கார்கள் செல்ல முடியவில்லை. மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சென்னை மாநகர பேருந்துகளில் பாதியளவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு விட்டது. அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் 33 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. இப்போது 34 செ.மீ மழை பெய்து உள்ளதால் 47 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையை இந்த பதிவு முறியடித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மழை தாக்கம் அதிகரித்து இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu