தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்
தமிழகத்தில் மே ஒன்றாம் தேதி முதல் அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் கோடை காலங்களில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தை கொண்டு போய் சூரியனுக்கு பக்கத்தில் வைத்து விட்டது போல வெப்பநிலையானது அக்னி வெயில் தொடங்கும் முன்னே அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
மேலும் ஐந்து நாட்களுக்கு வட தமிழகம் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை தாக்க கூடும் என வானிலை ஆய்வு மையமானது அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் மே ஒன்றாம் தேதியிலிருந்து தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் சில இடங்களில் 115 பாரன்ஹிட் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போதைக்கு வேலூர், ஈரோடு, சேலம், திருவள்ளூர் ,மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பநிலை கொளுத்தி வருகிறது. மேலும் இன்னும் ஐந்து நாட்களுக்கு வெயில் வழக்கத்தைவிட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையமானது எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களில் வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் எனவும் 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிடங்களில் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரித்து இருக்கிறது.
வெப்ப அலை வீசும் போது பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம். தற்போதைய தகவல்கள் படி இந்த கோடை சீசனில் இதுவரை வெயில் காரணமாக தமிழகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் அதிக வெயில் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து நீர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் திடீர் மரணம் கூட ஏற்படலாம். எனவே வெளியில் செல்லும்போது பொதுமக்கள் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உங்களுக்கு தாகம் இருக்கிறதோ இல்லையோ தினமும் அதிகபட்சம் ஐந்து முதல் ஆறு லிட்டர் வரை குடிநீரை பருக வேண்டியது மிகவும் முக்கியமானது. அதிக அளவில் நீர் சத்தை உடலில் பராமரிக்க வேண்டியது அவசியம். வெளியில் விற்கும் குளிர்பானங்களை விட வீடுகளில் தயாரிக்கும் குளிர்பானங்களை அருந்துவது நல்லது. உதாரணத்திற்கு எலுமிச்சை ஜூஸ், மோர், இளநீர் ஆகியவற்றை வீட்டிலேயே தயாரித்துப் பருகலாம். கடைகளில் விற்பவை சுகாதாரமானவையா என்பதை நாம் நிச்சயம் உறுதி செய்ய முடியாது. அதே நேரத்தில் வீட்டில் தயாரிக்கும் போது அவை சுத்தமானதாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்ய முடியும். எனவே முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது நன்மை பயக்கும்.
ஆடைகளை பொறுத்தவரை கருப்பு நிறத்தை தவிர்ப்பது நல்லது. கருப்பு வண்ணம் வெயிலை உட்கிரகித்துக் கொள்ளும் என்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கருப்பு வண்ணங்களில் ஆடைகள் அணிவதை தவிர்த்து, வெள்ளை மற்றும் வெளிர் நிற வண்ணங்களில் ஆடை அணிவது அவசியம். மேலும் டைட்டான டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்றவற்றை அணிவதை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிவது வெயிலில் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கும்.
வெயில் உச்சத்தில் இருக்கும் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை முடிந்த அளவு வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், நோய்வாய்ப் பட்டோர் வெயிலில் செல்வதை கவனிக்க வேண்டும். கட்டாயம் வெளியில் சென்றே ஆக வேண்டும் எனும் போது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நீங்களும் செல்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் குடை அணிவது, தலைக்கவசம் அணிவது, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
வெயில் காலங்களில் அதிக அளவு உடல் உழைப்பை தவிர்ப்பது நல்லது. அதேபோல வெறும் காலில் தரையில் நடப்பதையும் தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டில் நன்கு காற்று வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் டீ - காபி அதிக அளவில் கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்களை குடிக்கும் போது அப்போதைக்கு நன்றாக இருந்தாலும் அது உடலில் நீர் இழப்பை அதிகரிக்கும். அதிக தாகத்தை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் குளிர்பானத்தை குடிக்க வைப்பதால் உடல் நல கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அதிகளவு வெப்பமாக இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் கணினி பயன்பாடு செய்யும் நபர்கள் சிறிது இடைவெளி எடுத்து தங்கள் வேலையை தொடர்வது நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu