சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகி உள்ளதால் மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னை அருகே வங்க கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம் காரணமாக சென்னையில் நேற்று இரவில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் சென்னை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை நகரில் தீவிர புயல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் புயலை எதிர்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் புயல் மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை இந்த நான்கு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் கடைகள் இயங்காது எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu