நீங்க முதியவரா? வெப்ப அலையால் பக்கவாதம் வரும்...அடுத்த எச்சரிக்கை
தமிழகத்தில் வெயில் உக்கிரமாகி வரும்நிலையில், வானிலை மைய ஆய்வாளர்கள் முதியவர்கள் வெளியில் சென்றால் வெப்ப அலையால் பக்கவாதம் வரும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயில் ஆரம்பமாகிவிட்டது.அதுவும் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. எப்பவுமே ஏப்ரல் மாதத்தில் வெயில் தாக்கம் ஆரம்பித்து மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் உச்சத்திற்கு செல்லும். ஆனால், இப்பவே தமிழகம் அனலால் துடிக்கிறது. பருவகால மாற்றத்தால் சுட்டெரிக்கிறது.
மனித உயிர்களும் காவு வாங்க ஆரம்பித்துவிட்டன. 19ம்தேதி ஓட்டுப்பதிவின்போது 2 பேர் சேலத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.. நேற்றுகூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெயிலில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இன்றைக்குகூட, தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3,4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் தாக்கி உள்ளது. சேலத்தில் 107, தர்மபுரி 106 டிகிரி வெயில் கொளுத்துகிறது.
அந்தவகையில் மொத்தம் 14 மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் அடித்து கொண்டிருக்கிறது.. எப்படியும் வரும் ஜூன் மாதம் வரை இந்த வெயில் இருக்கும் என்கிறார்கள். உள்மாவட்டங்களில், அடுத்த 4 தினங்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் இப்போதே எச்சரித்திருக்கிறது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பகலில் வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.. அதேபோல, வெயில் தாக்கத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
வெப்ப ஸ்ட்ரோக், மயக்கம், சோர்வு தாக்கி பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது, "வெப்ப அலை என்பது தமிழகத்துக்கு புதிது கிடையாது. எனினும், சராசரி வெப்ப அளவைவிட கூடுதலாக 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது, அதை வெப்ப அலை என்கிறோம். இதுபோன்ற வெப்ப அலையை மஞ்சள் அலர்ட் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இயல்பைவிட 5, 6 செல்சியஸூக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும். ஆனால், தமிழகத்தில் அது போன்ற நிலை தற்போது இல்லை..
அதேபோல, காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதாவது 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் உடலில் இருந்து வியர்வை ஆவியாக மாறாது. ஆவியாக மாறாமல் போகும்போது உடலில் உஷ்ணம் ஏற்பட்டு பலவித தொந்தரவுகள் வரும். தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக்கூடும். முக்கியமாக, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்ட்ரோக்) ஏற்படக்கூடும்.
கடலோர பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடல் காற்று உள்ளே வரும்போது வெப்ப நிலை குறையும். எனவே, பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் கூலித் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குபவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.. அதேபோல, ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி செய்பவர்கள் கூட கவனமாக அதில் ஈடுபட வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu