இந்தி கற்கச்சொன்ன சொமோட்டோ: எதிர்ப்பு கிளம்பியதால் பணிந்த நிர்வாகம்

இந்தி கற்கச்சொன்ன சொமோட்டோ:  எதிர்ப்பு கிளம்பியதால் பணிந்த நிர்வாகம்
X

கோப்பு படம் 

இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொமோட்டோ நிறுவன நிர்வாகி கூறியதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நிறுவனம் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது, சொமோட்டோ (Zomato). அண்மையில், மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சொமோட்டோவில், உணவு ஆர்டர் தந்தார். ஆர்டர் டெலிவரி ஆகாததால், இது குறித்து அந்த வாடிக்கையாளர், சொமோட்டோ சாட் சேவை வழியாக தொடர்பு கொண்டார்.

அதில், தனக்கு ஒரு உணவு டெலிவரி கிடைக்கவில்லை, எனவே, பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது. இந்தி தேசியமொழி. அதை ஓரளவு புரிந்து கொள்ளும் அளவுக்காவது அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிறுவன ஊழியருடன் விகாஸ் நடத்திய சாட் உரையாடல்.

இதனால் கோபமடைந்த விகாஷ், உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட, அது வைரலானது. இந்த விஷயம் தான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. தமிழகத்தில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். #RejectZomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் பதறிப்போன சொமோட்டோ நிறுவனம், இதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, அந்த ஊழியரை நீக்கிவிட்டதாக , அறிக்கை வெளியிட்டது.

சோமோட்டோ தரப்பில் வெளியான அறிக்கை

அந்நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம்தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை, பணிநீக்கம் செய்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்தை பகிரக்கூடாது. கோவையில் விரைவில் ஒரு உள்ளூர் கால்சென்டர் உருவாக்கும் பணியில் உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊழியர் பணி நீக்க நடவடிக்கையை எதிர்பாராத விகாஸ், "அந்த ஊழியருக்கு எப்படி பேச வேண்டும் என பயிற்சி கொடுங்கள்; அவரை பணிநீக்கம் செய்ததை திரும்பப்பெற்று அவருக்கு மீண்டும் பணி வழங்குங்கள். தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர பழிவாங்குதல் அல்ல" என்று, சொமேட்டோவிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வேலை கொடுப்பதாக, சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!