ஜெய்பீமை தொடர்ந்து துணிந்தவன் படத்திற்கும் கடலூரில் பா.ம.க. எதிர்ப்பு
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருந்தாலும் வன்னியர்களை வன்முறையாளர்களாக தூண்டும் விதமாக படமெடுத்து இருப்பதாக பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஜெய்பீம் திரைப்படத்திற்கும், நடிகர் சூர்யாவுக்கு கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ளது. சூர்யா பொது மன்னிப்பு கேட்காத அவர் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் இள.விஜயவர்மன் கடலூர் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்"கடந்த நவம்பர் வெளியான டி.செ.ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தை திரைப்பட நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மை சம்பவத்தை அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க, கதாபாத்திரத்தில் வந்த அனைத்து பெயர்களும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் மட்டும் குருமூர்த்தி என்ற வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளராக நடித்து வரும் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் சின்னமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னியர் சமுதாய மக்கள் ஜாதி வெறி வண்ணம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளார்.
சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல பண்ருட்டியில் உள்ள திரையரங்க உரிமையாளரிடம் பா.ம.க. சார்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக்கூடாது என மனு அளிக்கப்பட்டுள்ளது. இது கடலூர் மாவட்டத்திலுள்ள சூர்யா ரசிகர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu