5 மாடி குடியிருப்பில் குலுக்கல் ஒதுக்கீடு – ஆவேசத்தில் பொதுமக்கள்!

பவானி சாலையில் பொதுமக்கள் போராட்டம்!
ஈரோடு: ஈரோட்டில் பவானி சாலை, அன்னை சத்யா நகர் பகுதியில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு ஒதுக்கீட்டில் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பம், பொதுமக்கள் மறியல் முயற்சியாக மாறியது. பல ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வந்த மூத்த குடியிருப்பாளர்கள், புதிய அடுக்குமாடி வீடுகளில் தங்களுக்கு ஏற்பற்றவாறு வீடுகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, நீதிமன்றம் வரை போவதற்குத் தயார் என தெரிவித்து வருகின்றனர்.
35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்ததை அடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் அவை இடிக்கப்பட்டு, தற்போது 5 மாடிகளுடன் 300 வீடுகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. முன்பு இருந்தது 228 வீடுகள் மட்டுமே. ஆனால், புதிய ஒதுக்கீட்டில் “குலுக்கல் முறை” பின்பற்றப்பட்டதால், தரைத்தளத்தில் வசித்து வந்த 60 முதல் 75 வயதுடைய மூத்த குடியிருப்பாளர்களுக்கு மேல்மாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் தினசரி வாழ்க்கையில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, பவானி சாலையில் பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சித்தனர். டவுன் டி.எஸ்.பி. முத்துகுமரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தங்களது கோரிக்கைகளை எழுதி மனுவாக ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கினர்.
முன்பு வசித்த அதே வீட்டு எண்ணை விருப்பமான தளத்தில் வழங்கவேண்டும், மீதி வீடுகளை பிறருக்கு வழங்கலாம் என்பதே அவர்கள் வலியுறுத்தல். இந்த விவகாரம் சமூக நீதி, முதியோர்களின் வாழ்வாதாரம், நிர்வாக முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu