துாய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு புகார்

தூய்மை பணியாளரிடம் பி.டி.ஓ., சீண்டிய புகார், ஆண்களை வெளியேற்றி பெண்களிடம் விசாரணை
ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் 2024ல் டெங்கு பணியாளராக இருந்த 35 வயது பெண், தூய்மை பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒன்றிய வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.) பரமசிவம் (59) பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சமீபத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை அலுவலர் மதுமிதா மற்றும் கூடுதல் திட்ட அலுவலர் நந்தினி ஆகியோர் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல் கட்ட விசாரணையை நடத்தினர். விசாரணையின்போது, ஆண் பணியாளர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, 20க்கும் மேற்பட்ட பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக் குழுவினர் கூறுகையில், "புகாரின் உண்மைத் தன்மை குறித்து முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் பி.டி.ஓ.வின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து பி.டி.ஓ. பரமசிவத்திடம் கேட்டபோது, "மூன்று மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் தொந்தரவு குறித்து இப்போது ஏன் புகார் அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குரியது. நான் அவரிடம் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை. சிலரது தூண்டுதலால் பொய்யான தகவல்கள் கூறப்படுகின்றன. விசாரணையின்போது இது குறித்து விரிவாகத் தெரிவிப்பேன். நான் பணி ஓய்வு பெறும் நேரத்தில் என் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகவே இச்செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர்," என்று பதிலளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu