கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேக பெருவிழா நாளை (ஏப்ரல் 20) காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதுகுறித்து அக்கோவில் அறங்காவலர் குழு தலைவி வெங்கடேஸ்வரி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் தெரிவித்ததாவது: கும்பாபிஷேக விழா ஏப்ரல் 18ல் (நேற்று) தொடங்கியது. முதல் நாளில் காலை 8:30 முதல் மதியம் 12:00 மணி வரை குருமார்கள் அழைப்பு, யஜமானர்கள் சங்கல்பம், திருமாலிடம் அனுமதி பெறுதல், வேள்வி சாலையை புனிதப்படுத்தல், வேள்வி தொடங்குதல், வேள்வி நிறைவு ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை மேற்கொள்ளப்பட்டது.
முதல் நாள் மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை வேள்வி சாலையை புனிதப்படுத்தல், புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், நான்மறை, திவ்ய பிரபந்த தொடக்கம், யாக வேள்விக்கு நெருப்பை கடைந்து எடுத்தல், கலச பூஜை செய்தல், இளங்கோயிலில் உள்ள இறை சக்தியை கலசத்தில் இறக்குதல், கலசங்கள் அனைத்தும் வேள்வி சாலைக்குள் பிரவேசித்தல், 7 கலசங்கள் நீராட்டம் செய்தல், மீண்டும் வேள்வியை சிறப்பாக நிறைவு செய்து, நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெற்றன.
ஏப்ரல் 19 (இன்று) காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை யாகசாலையை புனிதப்படுத்தல், கலசங்களுக்கு பூஜை செய்தல், வேள்வி துவங்குதல், அனுதின வேள்வி, அனைத்து தேவர்களின் சிறப்பு வேள்வி செய்தல், வேள்வி நிறைவு செய்தல், நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெறுகின்றன. மாலை 4:00 முதல் 6:00 மணி வரை அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்தல், அபிஷேகத்துக்கு உண்டான வேள்வியை நிறைவு செய்தல், 9 கலச அபிஷேகம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவு 7:00 முதல் 10:00 மணி வரை யாகசாலையை புனிதப்படுத்தல், கலச பூஜை, அனுதின வேள்வி செய்தல், திருமாலுக்கு தாலாட்டு செய்தல், சிறப்பு வேள்வி செய்தல், அனைத்து தேவர்களையும் வரவழைத்து சிறப்பான வழிபாடு செய்தல், வேள்வி நிறைவு செய்து நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் முக்கிய நாளான ஏப்ரல் 20 (நாளை) காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி சேவை, 8:00 முதல் 9:00 மணி வரை யாகசாலையை புனிதப்படுத்தல், அனுதின வேள்வி, சிறப்பு வேள்வி, குடமுழுக்குக்கான யாக வேள்வி நிறைவு செய்தல், நான்மறை நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெறும். காலை 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடந்து, 9:30 முதல் 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.
காலை 10:45 மணிக்கு விஸ்வரூப தரிசனம், குருமார்கள் மரியாதை, நல்லாசிகள் வழங்குதல், தீர்த்த பிரசாதம் வழங்குதல், சான்றோர்களுக்கு மரியாதை செய்தல் ஆகியவை நடைபெறும். மாலை 4:00 முதல் 6:00 மணி வரை அழகிரிநாதர் சுவாமியின் திருமண விழா நடைபெறும். இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகிரிநாதர் திருவீதி உலா பவனி வருவார். இந்த விழாவில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவின் முதல் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு குருமார்கள் அழைப்பு, திருமாலிடம் அனுமதி பெறுதல், யாக சாலையை புனிதப்படுத்தல் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு புற்றுமண் எடுத்து வரப்பட்டு, யாகசாலையில் முளைப்பாலிகை இடப்பட்டது. பட்டாச்சாரியார்கள் அத்தி மரக்கட்டையை கடைந்து, இயற்கை முறையில் யாகசாலைக்கு தேவையான தீயை உண்டாக்கினர். பின்னர் புனிதநீர் கலசங்களை ஸ்தாபிதம் செய்து, முதல்நாள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.
இன்று காலை முதல் இரவு வரை மூன்று கால யாக பூஜைகள், சுதர்சன், ஸ்ரீராமன், கவுதம் உள்ளிட்ட பட்டாச்சாரியார்களால் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளை திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் விழாவுக்கு வந்து சிறப்பித்து பெருமாள் அருளை பெற வேண்டுமென அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சுந்தரவல்லி உடனுறை அழகிரிநாதர் சுவாமி திருவருள் பெற்று, எல்லா வளமும் பெற அன்புடன் அழைப்பதாக செயல் அலுவலர் அனிதா, அறங்காவலர்கள் சுந்தரகோபால், சுரேஷ்பாபு, அறிவழகன், குணசேகரன், கோவில் பணியாளர்கள், உபயதாரர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu