RCB தோற்றதற்கு முக்கிய காரணம் விராட்கோலியின் அவசரமாக அதிரடியாக விளையாட போகும் எண்ணம் தான் , முஹம்மது கைப் விமர்சனம்

IPL 2025: இது என்ன 6 ஓவர் மேட்ச்சா.. 3வது பந்திலேயே கோலி செய்த தவறு.. விளாசிய முகமது கைஃப்
பெங்களூர்: விராட் கோலி 6 ஓவர்கள் கொண்ட போட்டி என்று நினைத்து, முதல் பந்திலிருந்தே அடித்து ஆட முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்தப் போட்டி 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ஃபில் சால்ட் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 7 போட்டிகளில் 249 ரன்களைச் சேர்த்திருந்தார். அவரது சராசரி 49.8 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 141.47 ஆகவும் இருந்தது. மேலும் அவர் மூன்று அரை சதங்களையும் அடித்திருந்தார். இவ்வாறு சிறப்பாக விளையாடி வந்த நிலையில், 14 ஓவர் போட்டியில் இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக, விராட் கோலி 3 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரன் குவிக்க முடியாமல் திணறி, 14 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி 12.1 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது.
இது குறித்துப் பேசிய முன்னாள் வீரர் முகமது கைஃப், "விராட் கோலி பந்தைத் தூக்கி அடிக்க முயற்சித்தார். அவர் பொதுவாக 20 ஓவர் போட்டிகளில் இப்படி வந்தவுடன் அடித்து ஆடமாட்டார். இது 14 ஓவர் போட்டி என்பதால், விராட் கோலி முதல் பந்திலிருந்தே அடித்து விளையாட வேண்டும் என நினைத்துவிட்டார்" என்றார்.
"இது போன்ற கடினமான பிட்சுகளில் முதலில் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். விராட் கோலி முதல் ஐந்து பந்துகள் வரை சற்றுப் பொறுமையாக இருந்து, அதன் பின்னர் அதிரடிக்கு மாறியிருக்கலாம். ஆனால், விராட் கோலி இது 6 ஓவர்கள் கொண்ட போட்டி என நினைத்துவிட்டார். அதனால், ஒரு மோசமான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்தார்" என்று கைஃப் விமர்சித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu