கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் இன்ஜினியர்கள் போராட்டம்

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் இன்ஜினியர்கள் போராட்டம்
சேலம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் விஜயபானு தலைமையில், சங்க உறுப்பினர்கள் திரண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது அவர் கூறியதாவது: 2024 பிப்ரவரியில் ஒரு யூனிட் மணல் ரூ.2,500-க்கு விற்றது. தற்போது அது ரூ.4,200 ஆக உயர்ந்துள்ளது. எம்.சாண்ட் ரூ.3,000-இல் இருந்து ரூ.5,250 ஆகவும், பி.சாண்ட் ரூ.4,000-இல் இருந்து ரூ.6,300 ஆகவும் விலை உயர்ந்துள்ளன. இதனால் கட்டுமானச் செலவு 22% முதல் 40% வரை அதிகரித்துள்ளது. ஒரு சதுரடி கட்டுமான செலவு ரூ.2,500-இல் இருந்து ரூ.3,000 வரை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கட்டுமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
அவர் மேலும் கூறியதாவது, இத்தகைய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும். அதேசமயம், கட்டுமானப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை விவரித்து, நாங்கள் அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளோம், என்றார்.
இந்த போராட்டத்தில், செயலர் பாஸ்கரன், பொருளாளர் அசோகன், சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் செல்வகுமார், கமல், செயஜ்குமார், சுபாஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu