மணல் குவாரிகளை திறக்ககோரி லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

'மணல் குவாரிகளை 15 நாட்களில் திறக்காவிட்டால் வழக்கு தொடர்வோம்'
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் குழு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சங்கத்தின் செயலாளர் கண்ணையன் பேசுகையில், ஓமலூர்-தாரமங்கலம் சாலையில் உள்ள பெரியாம்பட்டியில் ஒருவர் முறைகேடாக எம்.சாண்ட் சேமிப்பு கிடங்கு வைத்து நேரடி விற்பனை செய்வதால் தாரமங்கலத்தை சேர்ந்த லாரி, மஸ்தா, டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் போலீசாரின் உதவியுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக மணல் குவாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் முன்பு ரூ.2,000க்கு விற்ற எம்.சாண்ட் தற்போது ரூ.6,000க்கு விற்கப்பட்டாலும் அதன் தரம் குறைவாக உள்ளதாக விமர்சித்தார். மாநிலத்தில் 4,500 கல் குவாரிகள் இருந்தும் வெறும் 400 குவாரிகள் மட்டுமே தரச்சான்று பெற்றுள்ளதாகவும், 100 குவாரிகளின் அனுமதிக் காலம் முடிந்தும் தொடர்ந்து இயங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். 15 நாட்களுக்குள் மணல் குவாரிகளை திறக்கவில்லை எனில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார். இக்கூட்டத்தில் சங்கத்தின் துணைத்தலைவர் பழனிசாமி, துணைச் செயலாளர் செல்வம், பொருளாளர் சந்திரன் உள்பட பெரியாம்பட்டி மக்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu