அம்மாபேட்டை சுங்கச்சாவடி விவகாரம், ‘அழிக்கப்படும் மரங்களும், உயர்நீதிமன்றத்தின் கடைசி வாயிலும்

அம்மாபேட்டையில் டோல்கேட் அமைக்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
பவானி: சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் (என்.ஹெச்.544) அம்மாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கின் முடிவை பவானி தொகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
ஏற்கெனவே சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் ஓமலூர், வைகுந்தம் ஆகிய இடங்களில் இரண்டு கட்டண சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகள் தொப்பூரிலிருந்து பிரிந்து மேட்டூர், பவானி வழியாக செல்லும் சாலையைப் பயன்படுத்தி இந்த டோல்கேட்டுகளைத் தவிர்த்து பயணித்தனர். இதனால் அவர்களுக்கு பயணத் தூரம் குறைந்ததுடன் கட்டணமும் மிச்சமானது.
இந்த நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈரோடு, பவானி, மேட்டூர், தொப்பூர் வரையிலான 85 கிலோமீட்டர் தொலைவுள்ள மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக (என்.ஹெச்.544) அறிவித்தது. இதன்படி சாலையை அகலப்படுத்தி, தொப்பூர் மற்றும் அம்மாபேட்டையில் புதிய டோல்கேட்டுகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அம்மாபேட்டையில் டோல்கேட் கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த முடிவுக்கு மக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பவானி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஏப்ரல் 7 அன்று நடைபெற்ற விசாரணையில், மனுதாரர் தரப்பு வக்கீல் நர்மதா சம்பத், இருவழிச்சாலையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 4,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், இந்த திட்டம் குறித்த அறிவிப்பு 2023ல் வெளியிடப்பட்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நீதிபதி பரத சக்ரவர்த்தி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 28 (இன்று) அன்று நடத்த உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu