பல்லி விழுந்த ‘ஸ்வீட் பீர்’ குடித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதி

ஓமலூர் அருகே, பல்லி கிடந்த ‘ஸ்வீட் பீர்’ குளிர்பானத்தை தவறுதலாக குடித்த சிறுமி, வாந்தி மற்றும் தலைசுற்றல் ஆகிய பாதிப்புகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சாந்தி மற்றும் 16 வயதுடைய மகள் ப்ரியதர்ஷினி, 14 வயதுடைய தேவதர்ஷினி ஆகியோர் மேட்டூர் அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, இரு சிறுமிகளும் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி என்ற கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவை காண உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது, அவர்களது சகோதரர் பாலமுருகன் (வயது 20), ஓமலூர் அலங்கார் தியேட்டர் அருகிலுள்ள ஒரு பேக்கரியில் இருந்து ‘ஸ்வீட் பீர்’ எனும் வகை குளிர்பான பாட்டில்களை நான்கு வாங்கினார். வீடு திரும்பிய பின்பு, அந்த பானங்களை குடும்பத்தினர் பருகினர். அந்தக் குளிர்பானத்தை குடித்தபோது ப்ரியதர்ஷினிக்கு பாட்டிலுக்குள் இருந்த ஒரு சிறிய உருவம் வாயில் பட்டதைக் கவனித்து உடனே துப்பிவிட்டார். பிறகு பாட்டிலை ஆராய்ந்தபோது, அதனுள் பல்லி அல்லது அரணை போன்ற உயிரி இறந்த நிலையில் இருப்பது தெரிந்தது.
இந்த அதிர்ச்சியில் குடும்பத்தினர் உடனே பாட்டிலை வாங்கிய கடைக்குச் சென்று புகார் தெரிவித்தனர். பின்னர் ப்ரியதர்ஷினிக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால், அவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ரவி சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பேக்கரியில் ஆய்வு நடத்தினார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu