விவசாயிகள் 1,400 ஏக்கர் நிலம் வேண்டி உண்ணாவிரதம்

1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
பனமரத்துப்பட்டி: கையகப்படுத்தப்பட்ட 1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப விவசாயிகளுக்கே வழங்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, குரால்நத்தம், கட்டபுளியமரம் பஸ் நிறுத்தத்தில், உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றிய குழுவின் ஜீவா தலைமை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில் அத்திப்பட்டி, சூரியூர் கிராமங்களில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட 1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏ.ஐ.கே.எம்., மாநில பொதுச்செயலர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் அன்பு, ஒன்றிய தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர். சி.பி.ஐ.எம்.எல்., மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம், மாவட்ட செயலர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, மதியம் 2:30 மணிக்கு போராட்டத்தை முடித்து வைத்தனர்.
## **விவசாயிகளின் கருத்து**
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: "சுதந்திரத்துக்கு முன், முள் காடு, வனங்களை திருத்தி, கிணறு தோண்டி, நெடுங்காலமாக விவசாயம் செய்து வந்தோம். 2004-ல் பனமரத்துப்பட்டி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றியபோது, நீர்பரப்பு பகுதிக்குத் தொடர்பே இல்லாத எங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டன. அத்திப்பட்டி, சூரியூர் விவசாய நிலங்கள், வருவாய், வனம், மாநகராட்சி ஆவணங்களில் விடுபட்டுள்ளன. தற்போது அரசு புறம்போக்கு நிலமாக முள் காடாக உள்ளது. நிலத்தை திரும்பக் கேட்டு வருவாய்த்துறையிடம் தனித்தனி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோரிக்கையை அரசின் கவனத்துக்குத் தெரியப்படுத்தவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது."
வருவாய்த்துறையின் பதில்
வருவாய்த்துறையினர் கூறுகையில், "விவசாயிகள் அளித்த 359 மனுக்கள், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய பதில் விரைவில் அளிக்கப்படும்" என உறுதியளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu