சங்ககிரியில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்
சங்ககிரி: சங்ககிரி, இடைப்பாடி வருவாய் உட்கோட்ட அளவில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. லோகநாயகி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணை செயலர் மணி பேசுகையில், "தனியார் பால் நிறுவனங்கள் ஆவினை விட கூடுதலாக லிட்டருக்கு 10 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்வதால், ஆவினுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் ஊற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை தினமும் குறைந்து வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் விலையை போல, ஆவினுக்கு பால் ஊற்றும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்" என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சத்தியராஜ், "கூட்டுறவு கடன் சங்க விவசாயிகளுக்கு நகை கடன் வழங்க வேண்டும். சங்ககிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உழவர் சந்தை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
குறுக்குப்பாறையூர் சுப்ரமணி, "சூரியமலையில் இருந்து மாடுகள், குரங்குகள், மான்கள், மயில்கள் அதிகளவில் வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறுக்குப்பாறையூரில் அறுவடை செய்த பொருட்களை உலர வைக்க உலர் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தின் முடிவில் ஆர்.டி.ஓ. லோகநாயகி, "அனைத்து கோரிக்கைகளும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என உறுதியளித்தார். இக்கூட்டத்தில் தாசில்தார் வாசுகி, வேளாண் அலுவலர்கள், சங்ககிரி, இடைப்பாடி தாலுகாவில் உள்ள அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu